பக்கம்:கல்வி எனும் கண்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

கல்வி எனும் கண்



போன்று 'ஆங்கிலேயன் ஆட்சியே மேல்' என்ற உணர்வு தானே பலருக்கு உண்டாகின்றது. உணவிலே, உடையிலே, ஊர்ப் பயணத்திலே, உற்ற செயல்களிலே மனிதன் மாறி விட்டாலும் கவலை இல்லை. காலம் அவனைத் திருத்தி விடும் என நம்பலாம். ஆனால் உள்ளத்தால்-உள்ளத் துணர்ந்து காணும் பண்பாட்டால்-அப்பண்பாட்டின் வழியே முகிழ்க்கும் செயலால் அவன் மாறிவிட்டால் அவனை என்றும் யாராலும் திருத்த முடியாதே! சமுதாயத்தில், தன்னை ஒரு அங்கமாக்கிக்கொண்டு, தான் சமுதாயத்துக்காக வாழவேண்டியது மக்கள் நியதி. நாம் சமுதாயத்துக்கு-உயிரினத்துக்கு இன்று என்ன செய்தோம் என அவன் இரவில் படுக்கப் போகும்போது எண்ணிப் பார்க்கக் கடமைப்பட்டவன். ஆனால் இன்றைய மனிதன், எனக்கு மற்றவர் இன்று என்ன செய்தார்கள்-நான் யார் யாரிடம் கையூட்டு வாங்கினேன்-மொத்தம் எவ்வளவு ஆயிற்று-ஏன்? எத்தனை பேருக்குத் தீங்கிழைத்தேன்எத்தனை பேரைக் கொலை செய்தேன் என்றல்லவா கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான். போர்க்களத்தில் களம் காணவேண்டிய-செயலாற்ற வேண்டிய படைக்கலன்கள், இன்று வீடுதொறும்-தெருதொறும்-சந்திதொறும் ஓயாது ஒலிப்பதையும் பாழ்படுத்துவதையும் நாம் காண்கிறோம். 'துப்பாக்கி கலாசாரம்' (Gun Culture) என்று 'பிறரைச் சுடுதலாகிய பண்பாடே' என்று பேசுவதன்றோ இன்று நாட்டில் நடமாடுகின்றது. மாணவன் ஆசிரியரைக் கண்டு பயந்து-பணிந்து வணங்கிய காலம் போய் ஆசிரியர் மாணவரைக் கண்டு பயந்து நடுங்கும் காலம் வந்துவிட்டது. நாடாளும் மன்னர்கள் அச்சமின்றி இரவிலும். பகலிலும் தனியாக நாட்டு நலன் காண வரும்போது மக்கள் அஞ்சியும் அன்புளத்தாலும் போற்றி வணங்கிய நிலைமாறி, ஆளுகின்றவர்கள் மக்களுக்கு அஞ்சி அடுக்கடுக்காகக் காவல் சூழ அன்றோ வெளி வரவேண்டியுள்ளது. வீடுதோறும் கலையின் விளக்கம் என்று கேட்டவர்களுக்கெல்லாம் புதுப்பள்ளிகள், கல்லூரிகள் திறக்க வாரி வழங்கிய பண்பாடு நீங்கி, இன்று