பக்கம்:கல்வி எனும் கண்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்வி எனும் கண்

11



பள்ளியோ கல்லூரியோ தொடங்கவோ அன்றிப் புதுப்புதுப் பாடங்கள் பெறவோ இலட்சக்கணக்காகக் கையூட்டு தரவேண்டிய காலமாகவன்றோ இன்று மாறிவிட்டது. இந்த நாட்டில் லஞ்சம் தாண்டவமாடாத இடம் எங்கும் இல்லை என்ற பெருமைக்கு இங்குள்ளவர்கள் வழிவகுத்து உள்ளார்களே. சிறு ஊழியர்கள் பத்து, நூறு என்ற அளவில் நிற்க, பெரியவர்கள்-உயர்நிலையாளர்கள், ஆட்சியாளர்கள் இலட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் கையூட்டு வாங்குவதுதானே இன்றைய வாழ்க்கை நெறி, ‘சம்பளம் கிம்பளம்’ என்று வேடிக்கைக்காகச் சொல்லும் சொற்றொடர் இன்று வாழ்க்கையில் முக்கிய இடம் பெற்று விட்டதே. பள்ளியிலும் கல்லூரியிலும் சேர்ப்பதற்கு ஆயிரக் கணக்கிலும் இலட்சக் கணக்கிலும் வாரிக்கொட்ட வேண்டியுள்ளது. அப்படியே வேலை பெறத் தகுதி வேண்டாது லஞ்சமே அளவு கோலாக அமைய இலட்சத்தின் எல்லையினையும் அது கடக்கின்றதே!-இந்த அவல நிலையில், ‘மனிதன் எங்கே செல்கிறான்?’ என்ற கேள்வி எழுகின்றதே இந்த நிலையில் பாரதி கூறியபடி ‘நாட்டத்தில் கொள்வது’ எங்கே? எப்படி முடியும்?

பல பொருள்களைப் பற்றி எண்ணம் எழுகிறது. இங்கே முதலில் கல்வியைப் பற்றிக் காணலாம். பழங்காலத்தில் கல்வி போற்றப் பெற்றமை ‘குருகுல வாசம்’ என்ற வகையால் நாம் அறிகிறோம். தனித்த குருவினிட்ம், அவர்கள் வீட்டுப் பணிகளையும் செய்து கொண்டு, குடும்பமாகச் செல்வரும் வறியரும் வேறுபாடு இன்றி, கல்வி கற்று முன்னேறி நாட்டை வாழ்வித்தனர். வறிஞரான குசேலரும் அரச மைந்தனான கண்ணனும் ஒரே குருவிடம் வேறுபாடின்றிக் கற்றனர். பல பேரறிஞர்கள் அரச குமாரர்களையும் ஆண்டிகளின் பிள்ளைகளையும் தம்முடன் இருத்தி, தக்க வகையில் கல்வி கற்பித்ததைப் பழைய இலக்கியங்கள் காட்டுகின்றன. ஆனால் இன்று அந்த நிலையில்லை. ஆசிரியர்களும் நன்னூலாசிரியர் காட்டிய நல்லாசிரியர்கள்