பக்கம்:கல்வி எனும் கண்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

கல்வி எனும் கண்


வாழ்வுக்கும் கேடு பயப்பது’ என்று அச்சிட வேண்டும் என: அரசாங்கம் சட்டம் செய்துள்ளது. சிகரெட்டை அரசாங்கம் விரும்பினால் தடை செய்யலாம். அதைச் செய்யாது, அது பற்றி விளம்பரங்களையும் அனுமதித்து, அதன் கீழே அது தீங்கு செய்யக் கூடியது என்று அச்சிடுவது கேலிக் கூத்தாக அல்லவோ உள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் முட்டாள்கள் எனக் கருதுகிறார்களோ எனவும் நினைக்க வேண்டியுள்ளது. எனவே இந்த வகையில் நாட்டின் கண்ணான கல்வியினைக் காட்டும் நல்லாசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் முதல் பணி செம்மையாக நடைபெற வேண்டும். அத்தகைய நிலை அமைந்தால்-நல்லவர்-கற்றவர்-வல்லவர்-கடமை உணர்ந்து செயலாற்றுபவர் (கை எழுத்திட்டு வேறு வேலை கவனிக்காது செயல்புரிபவர்) மாணவர் நலம் கருதி அவர் உளங்கொளப் பாடம் சொல்பவர் பவணந்தியின் இலக்கணத்துக்கு இலக்கியமாக அமைபவர் ஆசிரியர்களாக அமைவர். அவ்வாறு அமைந்தால், நாட்டுக் கல்வி உயர்நிலை பெறும் என்பது உறுதி. ஆட்சியாளர்கள் இதில் முதல் கவனம்-முக்கிய கவனம் செலுத்தவேண்டும்.

பல்கலைக் கழகமானியக் குழு, இந்த அஞ்சல் வழிக்கல்வி முறையினை-ஆசிரியர் பயிற்சி அளவில் எடுத்துவிடப் போவதாக அண்மையில் ஒரு செய்தி வந்தாக அறிகிறேன்: விரைவில் செயலாக்கப் பெறின் பயன் விளையும்.

மற்றொரு வேடிக்கை. கல்லூரி ஆசிரியருக்கு" எந்தவிதப் பயிற்சியும் இல்லை. நேற்றுவரை ‘எம்.ஏ.’, பயின்றவர் எம்.பில்., தேர்வு எழுதியவர், இன்று சூன் திங்களில் அந்த ‘எம்.ஏ’ அல்லது ‘பி.ஏ’. வகுப்பிற்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியராகிவிடலாம். இதை எந்த அறிவுள்ள உலகமாவது ஏற்றுக்கொள்ளுமா? எண்ணிப்பார்க்க வேண்டாமா? பின் எவ்வாறு நம் மாணவர்கள் முன்னேற முடியும்? இனியாகிலும் உள்ள ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியிலோ அன்றிப் புதிதாகக் கல்லூரி அமைத்தோ தனியாகக் கல்லூரி ஆசிரியர்களுக்குப் பயிற்சியினை அளித்தல் இன்றியமையாததாகும்,