பக்கம்:கல்வி எனும் கண்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கல்வி எனும் கண்
17
 

பள்ளிகளும் கல்லூரிகளும் நாட்டில் பல்கிப் பெருகி. விட்டன. ஆனால் தரம் தாழ்ந்துவிட்டது. இதுதான் ஆளும் தலைவர்கள் உட்படப் பலரும் கூறுவது. ஏன் இந்த அவலநிலை? நான் மேலே காட்டிய இரண்டொன்று மட்டும் காரணமாக நின்றுவிடாது. இன்னும் சில உள்ளன.

இன்று எல்லாரும் கல்வி கற்க வேண்டும் என்ற அவாவினால் பலரும் தம் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகின்றனர். ஆனால் நகரங்களிலும் - கிராமங்களிலும் கூட ஆங்கில்ப் பயிற்சிப் பள்ளிகளே அதிகமாக வளர்கின்றன. ‘வீதி’தோறும் இரண்டொரு பள்ளி என்று பாரதி இத்தகைய பள்ளிகளைச் சொல்லவில்லை. வீட்டில் பெற்றோர்களும் மம்மி, டாடி என்று குழந்தைகள் அழைப்பதில் பெருமை கொள்ளுகின்றனர். ஆயிரக்கணக்கில் இலஞ்சம் கொடுத்து, நூற்றுக்கணக்கில் மாதச் சம்பளம் கட்டி, நெருக்கமான வீடுகளிலும் பிறவிடங்களிலும் உள்ள இப்பள்ளிகளில் பெற்றோர் தம் குழந்தைகளைச் சேர்க்கின்றனர். அங்கே உரிய பாடங்களையும் நன்கு கற்றுத் தருவதில்லை. எங்கோ ஒரு சில பள்ளிகள் தவிர, பல, வணிக நிலையங்களாகவே செயல்படுகின்றன. இவற்றைத் தடுக்க அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகைய பள்ளிகளில் பயின்ற பிள்ளைகளை எக்காரணம் கொண்டும், அரசாங்க இசைவு பெற்ற பள்ளிகளில் சேர்க்கக் கூடாது என்ற உத்திரவிட்டு, அதைச் செம்மையாகப் பாதுகாக்க வேண்டும். ‘முதற்கோணல் முற்றும் கோணல்’ என்றபடி இந்த முதற் கோணலே நாட்டுக் கல்வியை நலிவு செய்கிறது. இது மாற்றப் பெறல் வேண்டும். அரசாங்கம் உடன் ஆவன செய்ய வேண்டும்.

பள்ளியில் பயிலும் மாணவரும் ஆசிரியரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் வகையில் பாடங்கள் அமைவதோடு அவற்றை மாணவர் நன்கு அறிந்து தெளிந்த பின்னரே மேல் வகுப்பிற்கு மாற்றப் பெறல் வேண்டும். பள்ளியில் சேர்ந்துவிட்டால் பத்தாம் வகுப்பு வரை, தன்னை யாரும் தடை