பக்கம்:கல்வி எனும் கண்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்வி எனும் கண்

21


ஆசிரியரும் இல்லை; மாண்வர்களும் எழுந்து போக மாட்டார்கள். ஓரளவு இன்று வேறுபல சாதனங்கள் வந்துவிட்டமையால் மனப்பாடம் தேவை இல்லாத ஒன்றாகி விட்டது மனிதனால் செய்யப் பெற்ற கணிப்பொறி மனிதனைக் காட்டிலும் ஆயிரமாயிரம் நினைவாற்றல் உடையதாக, மனிதனுடைய வாழ்வையே தனதாக்கிக் கொள்ளும் நிலையில் நாம் வாழ்கிறோம். எனவே குருகுல வாசமும் மனப்பாடம் செய்யும் முறையும் மெல்ல மெல்ல இல்லையாகிவிட்டன.

இனி, பாடங்களைப் பற்றி ஓரளவு எண்ணலாம் என எண்ணுகிறேன்.

கணிதம் பன்னிரண்டாண்டு பயில்வர் பின்
கார்கொள்வானிலோர் மீன் நிலைதேர்ந்திலார்
அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும்
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்
வணிகமும் பொருள் நூலும் பிதற்றுவார்
வாழும் நாட்டில் பொருள்கெடல் கேட்டிலார்
துணியும் ஆயிரம் சாத்திர நாமங்கள்
சொல்லுவார் எட்டுணைப் பயன்கண்டிலார்

என்றுபாரதி பாடிய அதே நிலையில்தானே இன்றும் நாடு இருக்கிறது. 11+2+2 என்பதுமாறி 11+1+3 எனமாறிற்று பின் அதுவும் மாறி 10+2+3 என மாறிற்று. இப்படி வருடக் கணக்கு மாறி மாறி வருவதால் மட்டும் கல்வியின் தரம் உயர்ந்து விடுமா? பாடத்திட்டங்களில் என்ன மாற்றம் உண்டு? அப்படியே தமிழ் இரண்டாம் இடத்திலிருந்து முதலிடம் என்று பெயரைப் பெற்றதே தவிர ஆங்கிலம்தான் கட்டாயம் பயில வேண்டியுள்ளது. தமிழோ பிற இந்திய மொழிகளோடு, மற்றைய பிரஞ்சு, லத்தீன் மொழிகளோடு ஒரு மொழியாகவே ஒதுக்கப்பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் திரு. அவினாசிலிங்கம் செட்டியார் கல்வி அமைச்சராக இருந்தபோது, இன்றைக்குச் சுமார் நாற்பதாண்டுகளுக்குமுன் தமிழ்நாட்டில் பயிலும்