பக்கம்:கல்வி எனும் கண்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

கல்வி எனும் கண்


மாணவர் அனைவரும் தமிழைக் கட்டாயமாகப் படிக்கவேண்டும் என வற்புறுத்தினர். சட்டம் செய்தார். அன்று பாட நூல்களைத் தனியார் வெளியிட்டனர். எனினும் அத்தகைய பாடநூல்களை உடன் துணிந்து எழுத யாரும் முன் வரவில்லை இம்முறை என்னாகுமோ? என அஞ்சினர். அமைச்சர் என்னை அழைத்து எழுதச்சொன்னார்கள். நான் பாடநூல் எழுதுவது இல்லை என்ற கொள்கை உடையவன். எனினும் அவர் கேட்டுக்கொண்டதற்காக இசைந்து ஆறு, ஏழு. எட்டு ஆகிய மூன்று வகுப்புகளுக்குப் பாடநூல் எழுதினேன். அதனை வெளியிடத் தமிழ்நாட்டுப் பதிப்பகங்கள் விரைந்து செயல்படாதபோது, அப்போது ஆங்கிலப் பதிப்பகமாக இருந்த மாக்மில்லன் கம்பெனியே வெளியிட்டது. பின்னால் பலரும் வெளியிட்டனர்.

தமிழினைப் பொது, சிறப்பு என இருவகையாகப் பிரித்து, பொதுவினை எல்லாரும் பயிலவேண்டும் எனவும் சிறப்பினுக்குப் பதிலாக சிறுபான்மையோர் அவரவர் தாய் மொழியினையோ வேறு வேண்டிய மொழியினையோ கற்கலாம் எனவும் விதித்து அவ்வாறே ஒரு சில ஆண்டுகள் தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயமாக இருந்தது. அதே வேளையில் வேற்று மொழியாளராகிய சிறுபான்மையோருக்கும் அவரவர் மொழியினைக் கற்க வாய்ப்பும் இருந்தது. ஆயினும் அதே காங்கிரசினைச் சேர்ந்த திரு. சுப்பிரமணியம் கல்வியமைச்சராக வந்ததும், அந்த முறையை எடுத்துவிட்டு, தமிழைப் பதினான்கு மொழிகளோடு ஒன்றாக்கினார். அன்றுமுதல் வரும் கல்வி அமைச்சர்கள் முதல்வர்களுடன் இதைச் செயலாக்கவேண்டும்; தமிழ் நாட்டில் தமிழைக் கட்டாயமாக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டும் யாரும் செவிசாய்க்கவில்லை. அண்டை மாநிலங்களில் கன்னடம், மராத்தி போன்ற மொழிகள் கட்டாயமாக வந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. நல்ல வேளை இன்றைய முதல்வரும் கல்வி அமைச்சரும் விரைவில் தமிழைக் கட்டாயம் பயில வழிகாண ஏற்பாடு செய்வதாக