பக்கம்:கல்வி எனும் கண்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



2. பல்கலைக் கழகங்கள்

நாட்டின் உயர்கல்வியின் செழிப்பையும் தரத்தையும் அவற்றின்வழி தெளிவாகும் பண்பாடு, அறிவியல் தெளிவு, ஆக்கநெறி ஆகியவற்றையும் உலகுக்கு உணர்த்துவன அவ்வந்நாட்டுப் பல்கலைக்கழகங்களே. அதனாலேயே அத்தகைய பல்கலைக்கழகங்களை நாடி நம்நாட்டு மக்களுள் பலர் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். இந்தியாவை, தமிழ்நாட்டை அவ்வாறு பலர் நாடிவந்தகாலமும் ஒன்று இருந்தது. பல்கலைக் கழகங்கள் நாட்டின் ஒளி விளக்கங்களாய் உலக அறிஞர்களைத் தம்மிடம் ஈர்க்கும் திறன் உடையனவாய்-என்றென்றும் உலகில் வாழும் சமுதாய அறிவியல், வாழ்வியல் நுட்பங்களை. ஆய்ந்து கண்டு உணர்த்துவனவாய் அமையவேண்டும். கல்வியெனும்:மாளிகையில் உயர்ந்த மேல்மாடியாக நின்று, படிப்படியாக ஏறிவரும் அறிஞரை-சான்றோரை முழுமைபெறச் செய்வன இவை. காய்தல் உவத்தல் அகற்றி நேர்மை உடையனவாய், காலம் கடவாக் கடப்பாட்டில் நின்று, நேர்மையில் நிலைத்துநின்று, வாழும் சமுதாயத்துக்கும் வருங்காலச் சமுதாயத்துக்கும் வழிகாட்டும் திறனும் செழிப்பும் செயல்பாடும் திண்மையும் உடையனவாக அமையவேண்டும். வள்ளுவர் ‘கல்வி’ பற்றி வகுத்த கொள்கைக்கு நிலைக்களனாய், ‘தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற உணர்வுடையோரை உலகுக்குத் தக்கவராக்கி ஆண்டுதோறும் அளித்து உதவுவனவே இவை. இங்கே காழ்ப்புக்கும் கசப்புக்கும் வேற்றுமைக்கும் வேறுபாட்டுக்கும் இடமில்லை. வஞ்சகத்துக்கும் வன்கண்மைக்கும் வழக்குக்கும் வாதத்துக்கும் இடம் இல்லை. ஆம்! இவ்விடம் துலாக்கோல் போன்று நேர்மை வழங்கும் கடவுள் சந்நிதானம் போன்ற ஒன்றாகும்.