பக்கம்:கல்வி எனும் கண்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

கல்வி எனும் கண்


மேனிலைப்பள்ளியின் கல்வி உலகப் பொதுவாழ்வுக்கு வேண்டிய வாழ்க்கைக் கல்வியைக் கற்று, பின் வாழ்வுக்கு வகைதேட அமையும் நிலையில், செலுத்தும் வகையில் அமைவதாகும். ஆனால் பல்கலைக்கழகக் கல்வியோ அதன் பெயருக்கு ஏற்றபடி உலகளாவியதாய் (Universaly) ஏன் பரந்த அண்ட கோள எல்லை வரையில் பார்த்து ஆய்ந்து நலன் காண்பதாய் தனக்கு மட்டுமன்றி, தன் காலத்துக்கு மட்டுமன்றி, என்றென்றும் வாழும் மனித சமுதாயத்துக்கும் உயிரினத்துக்கும் உறுதுணையாய் அமைவதாகும்.மேலும் பயில்பவருக்கு இம்மைக்கு மட்டுமன்றி வள்ளுவர் கூறிய எழுகின்ற பிறவிகள்தோறும் அவனுக்கு வழிகாட்டி அவனை நடத்திச்செல்வது. பல்கலைக்கழகம் என்ற சொல்லே பொருள் பொதிந்ததாகும். ‘University’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மூலக்கரு ‘Universe’ என்பதாகும். ஆம்! பரந்த அண்டகோள அமைப்பின் தொடர்புடையதாய்- ‘எல்லாப் பொருளும் இதன்பால் உள’ என அனைத்தையும் அடக்கியதாய்-என்றென்றும் பரந்த உலகில் மட்டுமின்றி விரிந்த அண்டகோளத்தில் வாழ்ந்த-வாழும்-வாழ இருக்கும் உயிர்த்தன்மைகளை உணர்ந்து, அவற்றின் விரிவாக்கம்-அவை கொண்ட தொடர்பு-அவற்றோடு அமைந்த பஞ்சபூத ஒடுக்கம் என எல்லாவற்றையும் கொண்டதாய்-அதில் பயில்வோர் தெளிந்த உள்ளமும் தெள்ளிய அறிவும் கூர்த்த மதியும் நலம் கொஞ்சும் நெஞ்சமும் உடையவர்களாய், எவ்வுயிரையும் ஒத்துநோக்கும் இயல்பினராய் இருக்கவேண்டும். மாந்தர்க்குக் கண் என அமைந்த இக்கல்வி இத்தகைய பரந்த -விரிந்த-தெளிந்த-நுண்ணிய-ஆய்ந்த தன்மையில் உள்ளதாக அமையவேண்டும். ஆனால் இன்றைய பல்கலைக் கழகங்கள்-நம் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்கள் இந்தப் பெருநிலையில் உள்ளனவா? எண்ணிப்பாருங்கள்!

உலகெங்கும் சுற்றி மேலைநாட்டுப் பல்கலைக் கழகங்கள் பலவற்றையும் கீழைநாட்டுப் பல்கலைக் கழகங்கள் சிலவற்றையும் கண்டவன் நான். அவற்றோடு நம் நாட்டுப் பல்கலைக்