பக்கம்:கல்வி எனும் கண்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்கலைக் கழகங்கள்

45


கடமை உணர்ந்து திறம்படச் செயலாற்றுவார்களாயின் நல்ல மாணவமணிகள் நாட்டுக்கும் உலகுக்கும் கிடைக்குமே!

சென்னைப் பல்கலைக்கழகம் ஒரு காலத்தில் மிகச் சிறந்ததாகப் போற்றப் பெற்று, உலக அரங்கில் அதன் மாணவர்களுக்கு உரியமதிப்பும் நல்இடங்களும் தரப்பெற்றின. அனைத்திந்தியத் தேர்வுகளிலும் முதலிடம் பெற்றுத் திகழ்ந்தது. இன்று பல்கலைக்கழகம் தன்னிலையினின்று தாழ்ந்தமையானும் கல்லூரிகளும் வெறும் வாணிப நிறுவனங்களாக மாறிவருகின்றமையானும் தரத்தினைக் காண முடிவதில்லை. மதிப்பெண் அடிப்படையில் சேர்ப்பன விடுத்து பணத்தெண்ணைக் கணக்கிட்டுச் சேர்க்கும் கல்லூரிகளே அதிகமாகிவிட்டன. மருத்துவக் கல்லூரிக்கு ஐந்துலட்சம் ஆறுலட்சம் வரையிலும் பொறியியல் கல்லூரிக்கு இரண்டு லட்சம் வரையிலும் பேரங்கள் நடைபெறுகின்றன. சுயநிதிக் கல்லூரி அல்லது மானியம் பெறாத கல்லூரிகள் பலவும் பெருந்தொகை பெறுவது ஒருபுறம் இருக்க, எல்லா உதவிகளையும் அரசாங்கத்திடம் பெறும் கல்லூரிகளும் நாற்பது, ஐம்பது, ஆயிரம் வரையில் பாடத்துக்கு ஏற்ப வாங்குகின்றனவே! இவற்றைத் தடுக்க யார் நினைக்கிறார்கள்? சுயநிதிக் கல்லூரிகள் வசூலிக்கும் நிதிக்கு உச்ச வரம்பு தேவை என்று கல்வி மானியக் கோரிக்கையின்போது சட்ட மன்றத்தில் ஒருவர் சுட்டி இருக்கிறார். (தினமணி15-9-91-பக் 60 எனவே இது நாடறிந்த ஒன்றானதோடு, அரசும் அறிந்த ஒன்றாகி விட்டதல்லவா! பல்கலைக் கழகங்கள் இவற்றைக் கண்டிப்பதற்குப் பதிலாக ஊக்குவிக்கின்றன என்ற பேச்சே எங்கும் அடிபடுகிறது. கல்லூரிகளில் தேர்வு நடத்தும் முறையிலும் சீர்கேடுகள் உள்ளன என்பர்.

பல்கலைக் கழகச் செயற்பாடுகளிலும் மிகுந்த குறைபாடுகள் இருக்கக் காண்கிறோம். ‘ஊனினைச் சுருக்கின் உள்ளோளி பெருகும்’ என்பார் ஆன்றோர். ஆனால் இங்கே ஊன் சுருங்க, உள்ளமுமன்றோ சுருங்கிவிட்டது. நான் சுமார் 50 ஆண்டுகளாகச் சென்னைப் பல்கலைக் கழகத்தோடு தொடர்பு