பக்கம்:கல்வி எனும் கண்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பல்கலைக் கழகங்கள்
47
 

கல்லூரிகள் திறந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு வந்தது. இந்த விதிக்கு விலக்களித்தும் சில கல்லூரிகளுக்குச் சில பாடங்கள் தரப் பெறுகின்றன என்பர். இந்த ஆண்டு அறிஞர் குழு அறிக்கை வந்தபிறகும் செப்டம்பர் இடையில் ஒரு கல்லூரிக்குப் புதிய பாடம்-அதுவும் நவம்பர் டிசம்பரில் தேர்வு எழுத வேண்டிய பருவமுறைப் பாடம் தரப்பெற்றதாம் என்னே கொடுமை. எவ்வாறு மாணவர் தெளிவு பெறுவர்? சென்ற ஆண்டும் ஒரு கல்லூரிக்கு ஆகஸ்டு கடைசியில் பாடங்கள் அளித்து, செப்டம்பர் 15 வரையில் சேர்க்கவும் இசைவும் தந்தனர். அதுவும் பருவத்தேர்வாயின் எவ்வளவு தொல்லையுற வேண்டியிருக்கும் என எண்ணிப் பார்ப்பதில்லை. எப்படியும் இந்தக் கூட்டு முறையின்றி, தனித் தனியே ஒவ்வொரு கல்லூரிக்கும் (அதுவே உரிய செலவுத் தொகையினையும் உறுப்பினர்களுக்கு உரிய தொகையினையும் தந்து விடுகின்றது) தனித்தனிக் குழு அனுப்பி நேரில் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும். இந்த ஆண்டு ஒரு கல்லூரி கணிப்பொறி உயர் வகுப்பு வரும் என்ற நிலையில் சுமார் மூன்று லட்சம் ரூபாய்க்கு கணிப்பொறி, குளிர் சாதனப் பெட்டி மேசை நாற்காலி போன்றவற்றிற்குச் செலவு செய்தது. ஆயினும் செப்டம்பர் முடியும் வரையில் அதற்கென ஒரு பதிலும் பல்கலைக் கழகம் அனுப்பவில்லை. இந்த நிலை நீடித்தால் கல்லூரிகள் நிலை என்னவாகும்?

பெயர் மாற்றத்துக்கும் பிறவற்றிற்கும் கல்லூரி தொடங்குவதற்கும் அரசு முன் ஆணை தந்தால்தான் பல்கலைக் கழகம் செயலாற்றமுடியும். ஆனால் தமிழக அரசு பாடங்களைத்தர ஒருமுறைக்கு இருமுறை கடிதம் எழுதியும் தர மறுத்துப் பல்கலைக் கழகம் தன்னிச்சையாக இயங்குகிறது. அரசாங்கச் சார்பாக அதன் கல்விச் செயலரும் கல்லூரிக் கல்வி இயக்குநரும் நியமன உறுப்பினரும் இருந்தும் இப்படிப் பல்கலைக் கழகம் தன்னிச்சையாக இயங்குவது வருந்துதற்குரியதாகும்.