பக்கம்:கல்வி எனும் கண்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பல்கலைக் கழகங்கள்
49
 

யாத்திரைக்கு ஏற்பாடு செய்துவிடுவார்கள். உள்புகுந்து ஆராயின் களைய வேண்டியவை பல என அறியமுடியும். புகுவார் புகவில்லை, எனவே வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற வகையில் பல்கலைக்கழகம் இயங்குகிறது.

இங்கே இரண்டொன்றையே சுட்டினேன். இன்னும் பல உள. இந்த அளவே அமையும் என்று கருதி மேலே செல்கிறேன். தமிழ் நாட்டில் மற்றைய பல்கலைக் கழகங்களோ இந்திய நாட்டுப் பிற பல்கலைக் கழகங்களோ எப்படி, இயங்குகின்றன என்பதை நானறியேன். எனினும் இந்திய நாட்டுத் தொன்மையான ஒரு பல்கலைக் கழகம் இத்தகைய அவல நிலைக்குத் தள்ளப்பட்டமை அறிந்து அனைவரும் கவலைப்படுவதோடு, அரசாங்கத்தோடு இணைத்து இதனை முன்னைப் பெருமை பெறக் கூடிய நெறியில் ஆற்றுப்படுத்தி ஆவன செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளுகிறேன். ஆம்! அதன் மகன் என்ற முறையில் அல்லல்பட்டு ஆற்றாது வேண்டுகிறேன்.

தன்னாட்சிக் கல்லூரிகள்

பல்கலைக்கழக எல்லையிலேயே சில கல்லூரிகளுக்குத் தனி உரிமை வழங்கப் பெற்றுள்ளது. அவை தமக்கெனவே தனியாகப் பாடங்களை அமைத்துக் கொண்டு தேர்வு நடத்திப் பட்டம் பெறப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வழி உண்டு. இந்த நிலையில் தரம் உயரும் எனச் சிலரும் தரம் தாழும் எனச் சிலரும் கூறுகின்றனர். பரந்த அளவில் தேர்வு நிலை இருந்து முன்பின் அறியாதார் நேரிய வகையில் விடைத் தாள்களைத் திருத்தினால்தான் மாணவர் உண்மையான நிலை தெரியும். அறிந்த ஆசிரியரோ-அன்றிப் பயிற்றிய ஆசிரியரோ வினாத்தாள் அமைத்து விடையும் திருத்தும் முறை, நேர்மையுடன் அமையுமாயின் சாலச் சிறந்ததுதான். ஆனால் அந்த நிலை பலவிடங்களில் மாறுபடுகின்றதே! எனவேதான் பலர் அத்தகைய கல்லூரிகளை ஆய்ந்து தெளிவு