பக்கம்:கல்வி எனும் கண்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
50
கல்வி எனும் கண்
 

காண ஒரு தனிக்குழு அமைக்க வேண்டும் என வேண்டுகின்றனர். அப்படியே ஆட்சிக்குழுவில் உள்ளவர்தம் கல்லூரிகளும் சரிவர இயங்கவில்லை என்ற குறைபாட்டு ஒலியும் காதில் விழுகிறது. இவற்றையெல்லாம் சரிசெய்து ஒழுங்குபடுத்தாவிடின் நாட்டின் கல்வி நலிவுறும். நாடு நாடாக இராது. நாம் மனிதராக இரோம்! உடன் ஆவன காண வேண்டும்.

தன் நிதிக் கல்லூரிகள்

நாட்டை உலகுக்கு உண்ர்த்தும் உயர்கல்வி நிலை நன்கு பேணப் பெறல் வேண்டும். பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை போன்றவற்றிற்கென அமைந்த பல்கலைக்கழகங்களும் அதனைச் சார்ந்த கல்லூரிகளும் கூடத் தரம் உயர்த்தப் பெறவேண்டிய நிலையில் உள்ளன. தனியார் கல்லூரிகள்-சுயநிதிக் கல்லூரிகளாக முளைத்து இலட்சக்கணக்கில் பொருள் பெற்றும் தக்க வசதிகள் இன்றிச் செயல்படுவதாகச் சில செய்திகள் வருகின்றன. நாட்டில் அத்தகைய கல்லூரிகள் நாள்தொறும் பெருகிக்கொண்டே வருகின்றன. எனவே அவற்றின் தரம்-நிலை காக்கப் பெறல் வேண்டும்.

அனைத்து இந்தியாவுக்கும் ஒரே வகையான கல்வி முறை அமைய வேண்டும் என்று அனைவரும் கூறி வருகின்றனர். பள்ளிகளிலே வேண்டுமானால் மாநிலங்கள் தொறும் மொழி, வாழ்வு நெறி முதலியன மாறுபடுதல் போன்று கல்விமுறையும் மாறுபடலாம். ஆனால் கல்லூரிகளில்-பல்கலைக் கழகங்களில்-ஒருமை நெறி இயங்க வேண்டாமா? தமிழகம் தவிர, பிற மாநிலங்களில் பட்ட வகுப்பில் மூன்று பாடங்கள் முக்கிய பாடங்களாக (Main) உள்ளன. தமிழகத்தில் ஒரு பாடம் முக்கியமானதாகவும் அதன் தொடர்பான மற்றொன்று சார்புநிலை பெற்றதாகவும் உள்ளன. ஆழ்ந்து சிந்திப்பின் தமிழகக் கல்லூரிப் பாட முறையே சிறந்தது எனத்