பக்கம்:கல்வி எனும் கண்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்கலைக் கழகங்கள்

55



முதலிடம் அளித்து, அரசாங்க உத்தியோகங்கள் தரவழி காணவேண்டும். அதற்கும் சில திருத்தங்கள் தேவை. அந்த இருவகுப்புகளைப் பற்றி எழுதும் போது அதுபற்றி விரிவாகக் காணலாம்.

கல்வியினை மாநில, மத்திய அரசுகளோடு ஒன்றி இணைத்தமையின் பல மத்திய பள்ளிகள் தமிழ்நாட்டில் வளர்ந்தன. அப்படியே சில பல்கலைக்கழகங்களும் மத்திய அரசின் ஆணை வழியே இயங்குகின்றன. புதுவைப் பல்கலைக்கழகம் அத்தகைய பல்கலைக் கழகமே. இந்த நிலை வேண்டத்தகாத ஒன்று. அண்மையில் அசாம் மாநிலத்தில் இரு புதிய மத்திய பல்கலைக்கழகங்கள் தொடங்கத் தில்லி அரசு முயன்றும் எதிர்ப்பின் காரணத்தால் கைவிடப்பட்டது என்பது பத்திரிகைச் செய்திகளால் அறியப்படுவதொன்று. அது மட்டுமின்றி அத்தகைய பல்கலைக் கழகங்களுக்குத் தனிச் சலுகையும் தனித்த உயர்நிலையும் தருவது வேண்டப் பெறுவதன்று. தேவையற்ற ஒன்றைத் தோற்றுவித்து, அதற்கெனத் தனிச் சலுகை தந்து உயர்த்துவது மாநில மக்களைக் குறைத்து மதிப்பிடுவதாகும். வேண்டுமாயின் மாநிலங்கள் அமைத்த பல்கலைக் கழகங்களுக்கு அதிக மானியம் கொடுத்து, அங்கங்கே உள்ள களைகளைக் களைந்து, காவல் துறையில் தேவையானபோது மத்திய காவல் படையினை அனுப்புவது போன்று, மத்திய உயர் மட்டக்குழு ஒன்றை அமைத்து, தவறுகளைச் சுட்டிக்காட்டி, திருத்தம் செய்யலாம். அப்போது பல்கலைக் கழகங்கள் மட்டுமன்றி, மாநில அரசுகளும்கூட அஞ்சிச் செயல்படும். அதனால் நாட்டில் கல்வி நன்கு வளர்ச்சியுறும்.

மேலை நாடுகளில் ஒரே பல்கலைக்கழகத்தே பலவகைப் பயிற்சி வகுப்புகள்- பட்ட வகுப்புகள் உள்ளன. வேறு பல கல்லூரிகள் இணைக்கப்பெறவில்லை. அந்த நிலையில் நம் நாட்டிலும் சில பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆயினும் அவற்றின் தரம், மேலை நாடுகளில் காண்பது போன்று