பக்கம்:கல்வி எனும் கண்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

கல்வி எனும் கண்



ஆற்றுப்படுத்தி இப்பல்கலைக் கழகங்களுக்கு வழிகாட்டும் முறை மாநில அரசுக்குத்தான் புரியும். கூடுமாயின் அத்தகைய பல்கலைக் கழகங்கள் இயங்கும் மாவட்ட ஆட்சியாளரைத் தலைவராகக்கொண்டு கற்றறிந்த நல்லவர்கள் அமைந்த ஒரு குழுவினையும் அதன் மேற்பார்வைக்கு என அமைக்கலாம். வெறும் பாடங்கள் மட்டுமன்றி. அம் மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் அங்கே நிறைவு செய்யப் பெறல் வேண்டும். இன்றேல் வெறும் பெயரளவில் தான் அவை இயங்கும். இந்த நிலை முக்கியமாகக் கண்டு போற்றப்பெறல் வேண்டும்.

பல்கலைக்கழகங்கள் தாம் இயங்கும் அந்தந்தச் சமுதாய அமைப்பிற்கு ஏற்ப இயங்கவேண்டும். எங்கோ யாரோ வகுத்த பாடங்கள்-தேவையற்ற தெளிவற்ற எடுத்துக் காட்டுகள்-என்றோ எவரோ வகுத்த பாடமுறைகள் என்ற வகையில் இயங்காது அவ்வப்போது அதைச் சார்ந்த சமுதாயத்துக்கு ஏற்ற பாடங்களைத் திறன்றிந்து-முறை அறிந்து-சிலவற்றைத் தெளிவிக்கும் வகையறிந்து போற்றி அமைக்கவேண்டும்.

எனவே பல்கலைக்கழகங்கள் அவைஅவை வாழும் சூழலுக்கும் சமுதாயத்துக்கும் ஏற்றவகையில் பயன்படல் நலம் பயப்பதாகும். அதுவே நாடு வளர வழிகாட்டியாகவும் அமையவேண்டும்.

ஆரம்பக் கல்வி முதல் உயரிய 'டாக்டர்' பட்டம்பெறும் கல்விவரை ஒன்றற்கொன்று தொடர்பு கொண்டதாகவே அமையவேண்டும். பள்ளியில் எதையோ படித்து, மேநிலையில் தேவையற்றதைத் தேர்ந்தெடுத்து வெற்றி கண்டு, வேறு எதுவும் கிடைக்காததால் கிடைத்த எதிலோ சேர்ந்து எப்படியோ பட்டம்பெறும்நிலை படிப்பவருக்கும் நல்லதன்று; நாட்டுக்கும் நல்லதன்று. கோடி கோடியாகப் பணம்தான் வீணாகும்.