பக்கம்:கல்வி எனும் கண்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
62
கல்வி எனும் கண்
 

இதில் பயின்றவர் பின் பலதுறைகளில் பிரிந்துசெல்ல வாய்ப்பு உண்டாகிறது. எனவே இப்பாடத் திட்டத்தில் பல்வேறு வகைப்பட்ட பிரிவுகள் தேவை. இவ்வகுப்புகள் தொடங்கப்பெற்றபோது இத்தேவை அறிந்தே தொழில்துறை (Vocation) வகுப்பு பிரிக்கப் பெற்றது. அதில் பயின்றவர்களுக்கே அரசாங்கத் தேர்வு எழுத முதல் உரிமை தந்து, அவர்களையே பணியாற்ற அழைக்க வேண்டும் என்பதே திட்டம். (நான் அப்போது அக்குழுவில் இருந்தமையின் இதன். அவசியத்தை அறிய வாய்ப்பு இருந்தது). அரசாங்கம் அந்த நிலையிலிருந்து தவறிவிட்டது எனலாம்.

ஆண்டுதோறும் தேர்வாணையம் எழுத்தர்களுக்குத் தனித்தேர்வு (Group IV) நடத்துகிறது. இதில் மேநிலையில், இத்தகைய பாடங்களை எடுத்தவர் மட்டுமே எழுதவேண்டும் என்ற விதி அமைக்கப்பெறும் என எதிர்பார்த்தனர் பொது மக்கள். மாணவரும் இதில் சேர்ந்தால் உடன் அரசாங்கப் பணியில் சேரலாம் என்ற ஆர்வத்தில் முதலில் சேர ஆரம்பித்தனர். ஆனால் நடப்புநெறி வேறாகிவிட்டது. நான்காம் பிரிவில் தேர்வு அமைப்பதில் எந்த மாற்றமும் இல்லை. பழையபடியே இந்தத் தேர்வுக்கு எம்.ஏ., எம்.எஸ்சி, போன்ற உயர் பட்டங்கள் பெற்றவர்களும் பி.ஏ., பி. எஸ்.சி., பி.காம். போன்ற பட்டங்களைப் பெற்றவர்களும் எழுத வருகின்றனர். இவர்களோடு, பன்னிரண்டாம் வகுப்பில் வேலை வாய்ப்புக்கெனவே பயின்ற மாணவர் எப்படிப் போட்டியிட்டு வெற்றி காண இயலும்? இந்த நிலை இனியாகிலும் மாற வேண்டும். அரசாங்கப் பணிக்கு ‘+2’ வகுப்பில் பணிப் பயிற்சி பெற்றவரே தேர்ந்தெடுக்கப்படுவர்; மற்றவர் அத்தேர்வு எழுத முடியாது என்று விதி வகுத்தால் பல நன்மைகள் உண்டாகும்.

ஏதோ பொழுது போகவில்லை, சம்பளமும், இல்லை; சாப்பாடும் இலவசம் என்று பலர் கல்லூரியில் சேர்கின்றனர்