பக்கம்:கல்வி எனும் கண்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
72
கல்வி எனும் கண்
 


என இருபது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இன்று அந்தப் பழைய கல்வியை ஒப்பிட்டுக் காணத்தக்க பள்ளி, கல்லூரிகளில் கற்ற பெரியவர்கள் இன்மையின் அத்தகைய பேச்சுக்கு இடமில்லை. அக்காலத்தில் மாணவர்கள் கல்வி ஒன்றிலேயே கருத்திருத்தி, தாம் கற்றவற்றைப் பற்றி மேலும் மேலும் அறிய அவாவினர், ஆசிரியர்களும் பெற்றோரும் அவர்களுக்கு வழிகாட்டிகளாய் வேண்டிய உதவிகளைச் செய்து அறிவு வளர ஆக்கப்பணி புரிந்தனர். இன்று இரு நிலையும் அருகிவிட்டனவே! ஆயினும் பாரதியார் அத்தகைய கல்வியினையே பழித்து உரைத்தார். நம் நாட்டு வரலாறு அறியாத குழந்தைகள். எந்நாட்டு வரலாறுகளையோ அறிகிறார்களே என வருந்தினார். இன்னும் அந்நிலைதானே.

சேரன்தம்பி சிலம்பை இசைத்ததும்
தெய்வவள்ளுவன் வான்மறை கண்டதும்
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பாரளித்ததும் தர்மம் வளர்த்ததும்
பேரருட் சுடர்வாள் கொண் டசோகனார்
பிழைபடாது புவித்தலம் காத்ததும்
வீரர்வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்
..................
அன்னயாவும் அறிந்திலர் பாரதர்
ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர்

என்று ஏங்கிப் பாடுகின்றார். அவர் இருந்த அந்த நாளில் ஆங்கிலப் பாடத்திற்கு முக்கியத்துவமும் அனைத்துப் பாடங்களையும் ஆங்கிலத்தில் பயிற்றியதும் இந்தியப் பண்பாடு பற்றி அறிய வாய்ப்பு இல்லாத நிலையும் அவரை அப்படிப் பாட வைத்தன. ஆனால் உரிமை பெற்று நாற்பத்தைந்து ஆண்டுகள் கழிந்த பின்பும் அதனினும் கேடாய் ஆங்கில மோகம் அனைவரையும் ஆட்டிப் படைக்க, தமிழ்நாட்டில் தமிழ்