பக்கம்:கல்வி எனும் கண்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இடைநிலை–உயர்நிலைப் பள்ளிகள்
75
 


பாடங்களே பயிற்றுவிக்கப் பெற்றன. தமிழ், ஆங்கிலம், கணக்கு, வரலாறு, புவிஇயல் ஆகியவையே அவை. அவை அனைத்தும் வகுப்பின் தரத்துக்கு ஏற்ப, படிப்படியாக உயர்ந்து வந்து பயிலும் மாணவர்களுக்குத் தெளிவினை உண்டாக்கும். உதாரணமாக நிலநூலை எடுத்துக் கொள்வோம். கீழே ஐந்தாம் வகுப்புவரை ஊர், வட்டம், மாவட்டம், மாநிலம் இவைபற்றி இரண்டாம் வகுப்பிலிருந்து பயின்று வந்த மாணவன் ஆறாம் வகுப்பு வந்ததும் இந்தியாவைப்பற்றி முற்றும் தெளிவுறப் பயில்வான். பின் ஏழாம் வகுப்பில் ஆசியாவைப்பற்றித் தெளிவாகவும் அதைச் சார்ந்த சில ஐரோப்பிய நாடுகள் பற்றிச் சுருக்கமாகவும் அறிவான். பின் 8ஆம் வகுப்பு வரும்போது பிற கண்டங்கள் கடல்கள் பற்றி அறியும் வகையில் பாடநூல்கள் அமையும். ஒன்பதாம் வகுப்பில் (IV Form) உலக முழுவதும் பற்றிய நில வரலாற்றை அறிந்து அத்துறையில் மனநிறைவு பெற்றுத் தெளிவு காண்பான். பள்ளியில் இரு மேல் வகுப்புகளிலும் இந்தப் பாடம் கிடையாது. ஒன்பதாம் வகுப்புவரை (W Form) வரலாற்றிலும் அப்படியே. எனினும் தமிழக மாணவனுக்கு எங்கோ இராசராசன் போன்ற ஓரிரு அரசர்களைப் பற்றி மட்டுமே அறிய முடியும். ஆனால் வடநாட்டு வரலாறு, ஆங்கில நாட்டு வரலாறு பற்றி அதிகமாக அறிய வாய்ப்பு இருந்தது. அதனாலேயே பாரதி நைந்து பாடினார். கணக்கிலும் அப்படியே, வகுப்பின் தரத்தினுக்கு ஏற்ப, பள்ளி இறுதி வகுப்புவரை திட்டமான பாடத்திட்டம் வகுக்கப் பெற்றிருக்கும். இம் மூன்றில் முன்னவை இரண்டும் IV பாரத்தோடு நிற்க, கணிதம் மட்டும் பள்ளி இறுதி வகுப்புவரை தொடர்ந்து (VI Form) நடைபெறும். அந்த இரு பாடங்களுக்குப் பதிலாக மாணவர் விருப்பப்படி வேறு இரு பாடங்களை விருப்பப்பாடங்களாக (Optionals) எடுத்துக் கொள்ளலாம். ஆங்கிலமும் தமிழும் வகுப்பு நிலைக்கு ஏற்ப, சிறு சிறு இலக்கியங்கள், தெளிந்த உரைநடைகள் தொடங்கி, உயர்ந்த இராமாயணம் போன்ற இலக்கியங்கள், அறிஞர் எழுதிய கட்டுரைகள் என அமைய நிற்கும்.