பக்கம்:கல்வி எனும் கண்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


முன்னுரை

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக'
என்று வள்ளுவர் சொன்ன குறளின் அடிப்படையிலேயே இந்த நூல் எழுதப் பெற்றுள்ளது. இதற்கு விளக்கம் தந்த பரிமேலழகர் ‘இதனால் கற்கப்படும் நூல்களும் கற்குமாறும் கற்றதனால் பயனும் கூறப்பட்டன’ என்கிறார். இந்த முறையில் இன்றைய நாட்டுக் கல்வி இருக்கிறதா என்பதை நல்லோர் எண்ணிப் பார்க்கவும் இல்லையானால் வள்ளுவர் பிறந்த நாட்டில் அவர் மொழிந்த வகையில் கல்வித்துறையை அமைக்கவும் வேண்டியே இந்நூல் எழுதப்பெற்றது.

நாட்டில் நாம் கற்கிறோம். ஆனால் கற்பவற்றை-கற்க வேண்டியவற்றைக் கற்கிறோமா? இல்லையே! இன்றைய கல்வி மக்கள் வாழ்க்கைக்கு-சமுதாய வளர்ச்சிக்கு ஏற்றதாக உள்ளதா? ஆம் என்று யாராவது கூறமுடியுமா ?

சரி, அவ்வாறு கற்பனவற்றைக் கசடுஅற-பிழையறா (பரிதி) மாசுஅற (காளிங்கர்) குற்றமறக் (மணக்குடவர்) கற்கிறோமா? அதுவும் இல்லையே. ஆரம்பப்பள்ளி முதல் கல்லூரி முதுகலை வரையில் அவ்வாறு மாணவர்கள் கற்றால்-கற்கும் வகையில் ஆசிரியர்கள் ஆற்றுப்படுத்தினால் தேர்வுகளில் நூற்றுக்கு நூறு தேற வேண்டாமா? ஆனால் அந்த நிலை இல்லையே!

அடுத்து, கற்றபடியாவது நிற்கிறோமா? அதுவும் இல்லையே! ‘தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு காமுறுவர் கற்றறிந்தார்’ என்ற குறளுக்கு ஏற்ப, அனைவரும் கற்றபடி நடந்தால் நாட்டில் ‘எல்லாரும் எல்லாச் செல்வமும்’. பெற்று இன்பமாக வாழும் நாடாகத்தானே இது இருக்கும். ஆனால் அந்த இன்பம் எங்கே இருக்கிறது?

எனவே நாட்டில் தேவையான-சமுதாய வாழ்வை வளம் படுத்தும் கல்வி இல்லை என்பது கண் கூடு. இதை ஒருவாறு விளக்கும் வகையிலே ஒவ்வொரு பகுதியும் இந்நூலில் எழுதப்பெற்றுள்ளது. அக்குறைகளை நீக்க வழிகளும் ஓரளவு சுட்டப் பெறுகின்றன.

திருக்குறளில் பொருட்பாலில் அரசியல், தொடக்கத்தே முதல் அதிகாரமான இறைமாட்சிக்கு (38) அடுத்த அதிகாரமாகவே கல்வி (89) அமைகின்றது எதைக் காட்டுகிறது? கல்வியை - தேவையான கல்வியைத் தம் மக்களுக்கு