பக்கம்:கல்வி எனும் கண்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இடைநிலை–உயர்நிலைப் பள்ளிகள்
81
 


செய்ய அதை ஏற்றுக்கொள்ளும் சிலர் தமிழ்நாட்டில் தமிழ் அரசாங்க மொழியாகும் என்றால் முகம் சுளிக்கின்றனர். தாம் வாழும் நாட்டு மொழி கற்கவில்லை என்றால் அவ்ர்களை என்னவென்பது. ‘தாய்க் கொலைச் சால்புடைத் தென்பாரும் உண்டு’ என்று இவர்களைப் பற்றித்தான் தமிழ்ப் புலவன் கூறினானோ என எண்ண வேண்டியுள்ளது. வேலை வாய்ப்புக்கு வெளியே செல்லத் தமிழ் பயன்படாது எனத் தமிழைக் கட்டாயமாக்கும் நிலையில் சிலர் பேசுவதும் கேட்கிறது. அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டை விட்டே போகப்போகிறார்களா? அன்றி, பிறமாநிலங்களிலெல்லாம் தமிழர்களை ‘வருக’ என வரவேற்று நிற்கின்றனரா? மத்திய அரசிலும் பிறமாநிலங்களிலும் சுதந்திரம் பெற்ற நாளிலிருந்த தமிழர்களில், இன்று நான்கில் ஒரு பகுதிகூட இல்லை என்று சொல்லலாம். 'மண்ணின் மைந்தருக்கே வாழ்வு’ என்ற சொல்லே நாள்தோறும் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகமாக வளர்கின்றதே. ஒரே நாடு இந்தியா என்ற கொள்கைக்கே மூடு விழாவினைச் செய்வது போல் சில மாநிலங்கள் செயல்படுவதையும் அச்செயல்களை மத்திய அரசாங்கம் ஆதரிப்பதையும் அநேகத் தலைவர்களே கூறி வருகிறார்களே: இந்த நிலையில் இந்தியைக் கற்று எந்த மாநிலத்தில் வாழப் போகிறார்கள்: ‘செல் விருந்து ஒம்பி வருவிருந்து பார்த்திருக்கும்’ தமிழர்களைப் போன்று வேறு யாரும் ஏமாளிகளல்லர். எனவே அந்தந்த மாநிலத்தில் அவ்வம்மொழி முதன்மொழியாகக் கட்டாயம் கற்க வழிசெய்து, பிறகு மூன்று என்ன நான்கு மொழிகளைக்கூடக் கற்கட்டுமே. கன்னட நாட்டிலே தமிழர் தமிழை நான்காவது மொழியாகத் தான் கற்கின்றனர்-கன்னடம் முதல் மொழி பின் இந்தி, ஆங்கிலம். அந்த மாநிலத்தில் இந்த நிலையினை ஏற்றுக் கொள்பவர் தமிழ்நாட்டில் மட்டும் தடை சொல்லுவானேன்? எண்ணிப் பார்க்க வேண்டும்