பக்கம்:கல்வி எனும் கண்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
82
கல்வி எனும் கண்
 

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப் பெற்றபோது பெருநகரங்களிலோ எல்லைகளிலோ உள்ள வேற்றுமொழி பேசும் சிறுபான்மையோருக்கு வழி செய்யப்பெற்றுள்ளது. நான் முன்னமே இது பற்றியும் அவர்கள் தாய்மொழி கற்று திரு. அவினாசிலிங்கம் காலத்தில் இருந்த வகையினையும் விளக்கியுள்ளேன். இரு மொழித்திட்டத்திலேயும் அந்தச் சிறுபான்மையோருக்குத் தாய் மொழி கற்க வழி உண்டே, நூற்றுக்குப் பத்துப் பேருக்கு மேலிருந்தால் அவர்தம் தாய் மொழி கற்றுத்தர வேண்டுமெனவும் உயர்நிலைப் பள்ளியில் ஒரு வகுப்பில் பத்துப் பேர் அல்லது பள்ளியில் 40 பேர் இருந்தால் அவர்தம் தாய் மொழி கற்றுத் தரவேண்டும் என்றும் சாசனம் உள்ளதே. இதைச் சில மாநிலங்கள் பின்பற்றவில்லை. தமிழகம் இதை அதிகமாகவே பின்பற்றுகின்றதே. சிறுபான்மையோர் மொழி மூன்றாவது மொழி. ஆனால் இங்கு வடமொழியோ, பிரஞ்சோ, லத்தினோ தானே இந்தி ஆங்கிலத்தோடுதானே மூன்றாவது மொழியாகிறது. தமிழ் இம்மொழித் திட்டத்திலும் இடம் பெறவில்லை. இதை எந்தச் சமூகமாவது ஏற்றுக்கொள்ளுமா. ‘எதுவரினும் வருக அல்லது எது போயினும் போக’ என உறங்கும்.தமிழகம் தான் ஒருவேளை ஏற்றுக்கொள்ளும். எனவே மொழிக் கொள்கையினை அரசியல் சாசனப்படி-மேலே காட்டிய வரையில் இரு மொழிக் கொள்கையாயினும் -மும்மொழிக் கொள்கையாயினும் ஏற்றுக்கொண்டு எல்லா மாநிலங்களும் பின்பற்றினால் நாட்டில் ஒற்றுமை வளரும். நாடு நாடாகும். அவ்வம் மாநில மொழி மூன்றில் ஒன்றோ இரண்டில் ஒன்றோ கட்டாயம் இருக்கவேண்டும்.

தமிழ்நாட்டில் அண்மையில் எடுத்த மக்கள்தொகை கண்க்குப்படி வேற்று மொழியினர் 14.65 % உள்ளனர் என அறிகிறோம். ஆனால் இந்த மக்கள் தொகை கணக்கு, மொழி அடிப்படையில் எடுக்கப் பெறவில்லை. 1931க்குப் பிறகு எந்த மக்கள் தொகை கணக்கும் சரி வர மொழி அடிப்படையில் எடுக்கப் பெறவில்லை என்பதற்கு அதன்