பக்கம்:கல்வி எனும் கண்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
92
கல்வி எனும் கண்
 


இனி ஆரம்பப் பள்ளிகளில் அமையும் பாடங்களைப் பற்றிச் சிறிது காண்போம். தற்போது மெட்ரிகுலேஷன் போன்ற பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மிக அதிக மன சுமைகள் ஏற்றப்பெறுகின்றன. அரசாங்கப் பள்ளிகளிலும் பாடத்திட்டம் தேவையான அளவுக்கு அதிகமாகவே உள்ளது. நான் இதுபற்றி முன்னரும் குறிப்பிட்டுள்ளேன். முதல் இரண்டு வகுப்புகளில் தாய்மொழியில் எழுத்து, பதம், இருசொல், முச்சொல் வாக்கியங்கள் போன்றவற்றை மொழியிலும், எண்கள் ஒருவரிசை-இருவரிசை கூட்டல், கழித்தல், சிறு அளவு பெருக்கல் போன்றவற்றையும் கற்றுத் தருதல் வேண்டும். இவற்றுடன் அந்தந்த ஊர்களுக்கு ஏற்ப, சுற்றுப் புறச் சூழலுக்கு அமைய, சிறு வரலாறுகள், நில அமைப்பு முறை, அங்குள்ள தொழில் முக்கிய தலைவர்கள் வாழ்ந்த நிலை, பிறவற்றைச் சொல்லித் தருதல் வேண்டும். ஆத்திசூடி போன்ற சிறு சிறு . தொடர்களாலான அறநெறி பற்றிய வாக்கியங்கள் பயிற்றப்பெறல் வேண்டும். விளையாட்டு வகையிலே பலவற்றைச் சொல்லித்தரலாம். பள்ளிநேரம் காலை 8 மணி பிற்பகல் 2 மணி என்ற அளவில் 30 மாணவர் களுக்கு (ஒரே வகுப்பு) ஒர் ஆசிரியர் அளவில் அமைந்து செயல்படவேண்டும், ஆசிரியர் குழந்தைகளோடு குழந்தையாகி விடவேண்டும். ஆசிரியர் என்ற அச்சம் எழாத வகையில் அவ்ர்கள் நடந்துகொள்ளவேண்டும். வீட்டில் இருப்பதைக் காட்டிலும் பள்ளியில் இருப்பதே மகிழ்ச்சிக்குரியதென அந்த இளம் பிஞ்சு உள்ளங்கள் நினைக்கவேண்டும். பள்ளிக்கூடம் ஏதோ சட்டதிட்டம், அடி உதை என்ற எண்ணத்தை அவர்களிடம் உண்டாக்கக்கூடாது. பல ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி எனக்கு நினைவுக்கு வருகிறது.

1958இல் நான் ம்துரைப் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு முன்னோடியாக, அங்கே தியாகராஜா கல்லூரியில் தமிழ் முதுகலை வகுப்புத் தொடங்க, அன்றைய துணை வேந்தர் ஏ. எல். முதலியாரால் அனுப்பப்பெற்றேன். ஒரு முறை நான் இரயிலில் சென்றபோது அதே பெட்டியில் பம்பா