பக்கம்:கல்வி எனும் கண்.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆரம்பக் கல்வி
95
 


கூடங்கள் இன்று நடத்த முடியாது. எனினும் கட்டடம் இல்லாத பள்ளிகளே இல்லை என்னுமாறு செய்ய வேண்டும், அந்தந்த ஊர்மக்களிடமே இதைவிட்டால் அவர்கள் எளிதில் ஒவ்வோர் ஊரிலும் பள்ளி அமைத்துவிடுவர். தமிழ்நாட்டில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையில், கிராமங்களில் பள்ளிகள் அமைக்க ஊக்கமுடன், ஊரில் உள்ளவர்கட்கும் பணிவழியோ சாமான்கள் (மரம்-கல் முதலியன) வழியோ பாதி தர, அரசாங்கம் பாதிதரும் வகையில் செயல்படின் எல்லா ஊர்களும் பள்ளிகளைப் பெறும். முன்பு தமிழ் நாட்டில் இந்த வகையில் எத்தனையோ ஊர்களில் சாலைகள் அமைத்தனர். ஏரிகளைத் துப்புறவு செய்தனர். கால்வாய்கள் வெட்டினர். பள்ளிகளும் கட்டினர். இன்று பலகோடி செலவு செய்வதாகக் கூறும் அரசாங்கம், ஊர்தோறும் தக்கவகையில் இந்த முறையினை ஏற்பாடு செய்யின் பயன் விளையும் என நம்புகிறேன். ஆனால் அவ்வாறு தரும் தொகை யார் யார் கையிலோ சென்று சேராமல் அதற்கெனவே செலவிடப் பெறுகிறதா என்பதை அரசாங்கம் எச்சரிக்கையாகப் பார்த்துக் கொள்ள் வேண்டும். எனவே எல்லாவகையிலும் ஆரம்பக் கல்வி-பத்தாம் வகுப்பு வரை (எல்லாக் குழந்தை களுக்கும் 5-14) அமைய அரசு ஏற்பாடு செய்யின், நாட்டின் பிற வளங்கள் யாவும் தாமாகவே அமையும்.

இன்று பல தனியார் நிறுவனங்களும் மாணவர் கூட்டங்களும் எழுத்தறியா நிலையினைப் போக்க, ஒய்வு நேரத்தில் உதவுவதாக மாவட்டம் தோறும் அறிக்கை வருகின்றது. இளைஞருக்கு மட்டுமன்றி வயது வந்தோருக்கும் கல்வி கற்பிக்கும் இயக்கம் நாட்டில் வலுப்பெற்று வருகின்றது. எனினும் அதற்கென வகுக்கும் வழிமுறைகள் காரணமாகவோ, வேறு எதன் அடிப்படையிலோ அந்த முறை நன்கு நடைபெறவில்லை எனப் பலரும் கூறுகின்றனர். சமூகசேவை செய்வதாகக் கூறிக்கொண்டு, பட்டுடுத்து, படம் எடுத்துக் கொண்டு தம் சமூக சேவையைக் காட்டுவோரும் உண்டு. உண்மையில் தம்மைமறந்து சமூகசேவையில் பாடுபடுவோரும்