பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

கல்வெட்டில்‌ தேவார மூவர்‌


அவர்கள்‌ பொறுப்பேற்றார்‌. அவர்தம்‌ அழைப்பின்பேரில்‌ நினைவில்‌ வாழும்‌ தமிழறிஞர்‌ கா.ம.வே. அவர்கள்‌ முதல்‌ பேராசிரியராகப்‌ பொறுப்பேற்றார்‌. சுவடிப்புலத்‌ தலைவர்‌ என்ற தகைமையும்‌ இவருக்கு வழங்கப்பட்டது. அப்பணிக்‌ காலத்தில்‌ தஞ்சை மராட்டிய மன்னர்‌ கால அரசியலும்‌ சமுதாய வாழ்க்கையும்‌ என்ற நூலையும்‌ தஞ்சை மராட்டிய மன்னர்‌ வரலாறு என்ற நூலையும்‌ எழுதினார்‌.

போன்ஸ்லே வம்ச சரித்திரம்‌, மெக்கன்சி சுவடிகள்‌, மோடி ஆவணங்கள்‌ ஆகியவற்றை நன்கு ஆராய்ந்து இவ்விருபெரும்‌ நூல்களை வெளியிட்டார்‌.

ஆழ்நோக்காய்வு

திருவனந்தபுரத்தில்‌ இயங்கிவரும்‌ பன்னாட்டுத்‌ திராவிட மொழிமியல்‌ கழகத்தின்‌ வாயிலாகத்‌ தொல்காப்பிய மூலம்‌ - பாட வேறுபாடுகள்‌ - ஆழ்நோக்காய்வு என்ற நூல்‌ வெளிவந்தது. இந்நூல்‌ கா.ம.வே. ச., வே. சு., ப. வே. ரா. ஆகியோரின்‌ கூட்டுப்‌ பதிப்பாக வெளிவந்தது. இதில்‌ அறிஞர்‌ கா. ம. வே. அவர்களின்‌ பங்கை, “பேரா கா. ம. வேங்கடராமையா, ச.வே. சு. தொகுத்த பல செய்திகளை முறைப்படுத்தியும்‌, புதியன திரட்டியும்‌, விரிவாக்கியும்‌ பல நிறுவனங்களுக்குச்‌ சென்று செய்தி சேகரித்தும்‌ மூன்று அதிகாரங்களையும்‌ செம்மைப்படுத்தினார்‌” என அக்கழக இயக்குநர்‌ முதுமுனைவர்‌ வ.அய்‌. சுப்பிரமணியம்‌ அவர்கள்‌ குறித்துள்ளார்‌.

இப்பணி மட்டுமன்றித்‌ ‘தந்துரை’ என்ற தலைப்பில்‌ மிக விரிவான தொல்காப்பியப்‌ பாட வேறுபாடுகள்‌ ஆய்வுரையும்‌ செய்து, கா.ம.வே. அவர்கள்‌ வெளியிட்டுள்ளார்‌.

நிறைவுப்பணிகள்‌

சைவ அடியார்கள்‌ அறுபத்து மூவர்‌ வரலாறுகளையும்‌ ஆங்கிலம்‌

அறிந்தவர்கள்‌ - வெளி மாநிலத்தவர்‌ - வெளி நாட்டினர்‌ தெரிந்துகொள்ள வேண்டும்‌ என்பதற்காக - மரபுநிலை மாறாமல்‌ - எளியநடையில்‌ சுருக்கமாக எழுதி வெளியிட்டார்‌. அந்நூலின்‌ பெயர்‌ “THE STORY OF SAIVA SAINTS” என்பதாகும்‌. நால்வர்‌ வரலாற்றை (சம்பந்தர்‌, அப்பர்‌, சுந்தரர்‌, மாணிக்கவாசர்‌) விரிவாக ஆங்கிலத்தில்‌ எழுதித்‌ தனி நூலாக வெளியிட்டார்‌.