பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்வெட்டில் தேவார மூவர்

15


ஆன சொன் மாலை ஓதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.”

சீர்காழித் திருப்பதியில் அவர் பாடிய பதிகங்களில் “மடல் மலிகொன்றை” எனும் திருப்பதிகத்தின் “கானலங் கழனி” என்னும் பாடலில் ‘ஆணையும் நமதே’ என்றுள்ளது.

இங்ஙனம், நான்கு இடங்களில் ஆணை நமதே என்று சம்பந்தர் பாடியுள்ளமையின், நம்பியாண்டார் நம்பிகள் தாம் பாடிய ஆளுடைய பிள்ளையார் திருத்தொகையில், சம்பந்தரை “ஆணை நமது என்ன வல்லான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“முத்திப் பகவன் முதல்வன் திருவடியை
அத்திக்கும் பத்தர் எதிர் ஆணை நமது என்னவலான்”

என்பன அவ்வரிகள்.

ஆணை நமதென்ற பெருமாள்

“ஆணைநமது” என்றமையின் திருஞானசம்பந்தரை “ஆணை நமதென்ற பெருமாள்” என்றும் குறிப்பிட்டனர்.

“ஆணைநமது என்ற பெருமாள்” என்ற பெயர் பிரான் மலைக் கல்வெட்டில் காணப்பெறுகின்றது. இத்தன்ம சாசனத்துள் கையெழுத்திட்டவருள் ஒருவர் “ஆணை நமதென்ற பெருமாள்” ஆவர்.10

திருமையம் வட்டம் விராச்சிலை (பில்வனேசுவரர்) கோயில் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் 16-ஆம் ஆண்டுக்குரிய சாசனத்தில், “பெரிய திருக்கூட்டத்துத் தவணை முதலியார் மாணிக்க வாசகர் ஆணை நமதென்ற பெருமாள் ஆன கோவில் வாசகப் பிச்ச முதலியார்” என்று ஒருவர் குறிக்கப் பெறுகிறார்.11

நார்த்தா மலையில் உள்ள திருமலைக் கடம்பர் கோயில் முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியனின் ஒன்பதாம் ஆண்டுக்