பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டில் தேவார மூவர் 31

"ஈசன் அதிகையில்வா கீசன் எழுந்தருள

மாசில் பெருங்கோயில் வந்தமைத்தான் - பூசல்

விளைவித்த வேணாடும் வெற்பனைத்தும் செந்தி

வளைவித்தான் தொண்டையர் மன்" என்பது திருவதிகைச் சாசனக் கவியாகும். இவ்வூரில் வாகீசர் திருமடம் இருந்தமையை, முதல் குலோத்துங்கனின் நாற்பத்து நான்காம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டு எடுத்துரைக்கிறது’. இவற்றில் திருநாவுக்கரசர் வாகீசர் எனப் பெற்றமை காண்க.

திருநாவுக்கரசு சுவாமிகள் திருஞானசம்பந்தரை சீகாழியில் முதன்முதல் சந்தித்தபொழுது வணங்கத் திருஞானசம்பந்தர், அப்பரே என்றழைத்தருளியதாகப் பெரியபுராணம் பகரும்". எம்மண்டலமும் கொண்டருளிய ரீகுலசேகர தேவர்க்கு யாண்டு பதினெட்டாவதில் அளித்த பில்லமங்கலம் ஆகமசீலீசுவரர் கோயில் கல்வெட்டில் கையெழுத்திட்ட மகேசுவரர்களில் ஒருவர் பெயர் அப்பர் என்று அறிய வருகிறது.

இரண்டாம் குலோத்துங்கனாகிய அநபாயன் சைவசமய குரவர் மூவரிடத்தும் மிக்க பற்றுடையவன். அவர் தம் படிவங்களைத் திருவாரூர் திருமூலட்டான முடையார் கோயிலில் எழுந்தருளுவித்தான். தனது ஏழாவது ஆட்சியாண்டில் ஆளுடைய நம்பிக்கும் பரவை நாச்சியாருக்கும் அர்ச்சனா போகமாக அநபாய நல்லூர் என்ற மருகல் நாட்டுத் திருவாதிரை மங்கலம் என்ற ஊரை அளித்தான். ஆளுடைய பிள்ளையார்க்கும் திருநாவுக்கரசு தேவர்க்கும் வேண்டும் அர்ச்சனைகளுக்குமாகப் பன்னிரண்டாவது ஆட்சியாண்டில் மருகல் நாட்டுக் கங்கை கொண்ட சோழ நல்லூரான சிவபாத சேகர நல்லூரை அளித்தான்.

இத்தமிழ்க் கல்வெட்டோடு தொடர்ந்த வடமொழிக் கல்வெட்டில் தேவார மூவர், ப்ரஹ்மபுரீச (சம்பந்தர்) வாகதிபதி (திருநாவுக்கரசர்) ஸ்வஸ்சாமி மித்ர (சுந்தரர்) என்று குறிக்கப் பெற்றுள்ளனர். இதனால் திருநாவுக்கரசர் வாகீசர், வாகதிபதி என்று வழங்கப்பெற்றார் என்றும் அறியப்பெறும்.