பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா

பசுஞ்சாந்தம் கொண்டணிந்து பாதம் நோவ இட்டெடுத்து நடமாடி இங்கே வந்தார்க்

கெவ்வூரீர் எம்பெருமான் என்றேன் ஆவி விட்டிடுமா றதுசெய்து விரைந்து நோக்கி

வேறொரு பதிபுகப் போவார் போல வட்டணைகள் பலநடந்து மாயம் பேசி

வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே

என்பர் நாவுக்கரசர். வலம்புரத்தில் இரண்டாம் ராஜாதிராஜன் காலத்தில் வட்டணைக் காட்டவந்த நாயகர் என்னும் திருமேனி எழுந்தருள்விக்கப் பெற்றுள்ளது."

திருநாவுக்கரசர் திருவீதி

திருவதிகையில் பிடாரி கோயிலின் வட பக்கத்தில் காடுகெடுக்கப் பெற்றுப் புதிய தெரு ஒன்று உருவாக்கப் பெற்றது. இத்தெருவுக்குத்திருநாவுக்கரசர்திருவீதி எனப் பெயர் சூட்டப் பெற்றது."

திருநாவுக்கரசு குகை

குகை என்பது முனிவர் இருப்பிடம். தேவார மூவர் பெயரால் தமிழ் நாடெங்கும் பல குகைகள் இருந்தமையைக் கல்லெழுத்துக்கள் கூறுகின்றன.

திருக்குறுக்கையில் உள்ள மூன்றாம் குலோத்துங்கனுடைய 29-ஆம் ஆட்சியாண்டு (கி.பி. 1201)க்குரிய கல்வெட்டு திருநாவுக்கரசு குகை என்ற ஒரு குகையைப் பற்றிக் கூறுகிறது. இக்குகை கட்டுவதற்கும் இக்குகைக்கு வரும் அபூர்விகளுக்கும் திருவைகாசித் திருநாளுக்கு வரும் மகேசுவரர்களுக்கும் உணவு அளிக்கவும் நெல் தானம் செய்யப் பெற்றது. திருத்தாண்டகம் ஒதுவது குறித்தும் இக்கல்லெழுத்து அறிவிக்கிறது’.