பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

கல் சிரிக்கிறது


"ஏன் கோவப்படறே, தருமு?”


“கோபமா? கோபப்பட அவசியமேயில்லை எனக்கு. இந்தப் பூஜைக் கட்டளையில் பாதிப் பங்கு எனக்கு இருக்குன்னு தெரியுமோன்னோ? தலைமுறை தலைமுறையா, குடும்ப சாஸ்னமே இருக்கு ஒலைச் சுவடியில், தெரியுமோன்னோ?”


“எடுத்தாரய்யா சுயரூபத்தை, யமதர்மராஜன்!”

“மணி, இது சிரிப்புச் சமாச்சாரமில்லை!”

“நீ என்னத்தையோ ஒலைச்சுவடி எதையோ சாகவிக்கு இழுக்கறயே பின்னே! அதெல்லாம் எப்பவோ எரிஞ்சு போச்சு. ஒலைச் சுவடியாவது மண்ணாங்கட்டியாவது: பழம்பாய்க்கும் குப்பைக்கும் வித்தியாசம் தெரியாமல் அப்பா காலத்துலேயே போகிக்குக் கொளுத்திட்டா!”


அவர் புன்னகை புரிந்தார்.


“அப்படி வா வழிக்கு எப்பவுமே பெரியப்பா பிள்ளை, சித்தப்பா பிள்ளைன்னா கெளரவாள், பாண்டவாள்தானாக்கும்!”


“ஒரு வயத்துப் பிறப்பே இப்போ அப்படித்தானிருக்கு. உனக்கு நான் ஏன் விட்டுக் கொடுக்கணும்?”


“யாரும் யாருக்கும் விட்டுக் கொடுக்க வேண்டாம். உரியது உருப்படியா கிடைச்சால் போறாதா?” மணியின் தோளை லேசாகத் தட்டினார். ஒலைச்சுவடி உசிரோட, பத்ரமா இருக்கு தம்பி. பிள்ளை குணம் பெரியப்பாவுக்கு அப்பவே தெரியும் போல இருக்கு. என்னிடத்தில் ஒப்படைச்சுட்டுப் போயிருக்கார். என்னிடம் இருக்கு.”


“-ம்ம்ம்-? 'டூப்'விடறே!” ஆனால் மணிக்குக் குரல் கொஞ்சம் பின் வாங்கிற்று.


“மணி, 'போர்’ அடிக்காதே. நாம் சின்னக் குழந்தைகள் அல்ல.”