பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லா.ச.ரா.

13

மின்சார அடுப்பு. அலமாரியில் ஒரு டபரா, ஒன்றிரண்டு தம்ளர்கள், ஒரு குட்டி காபி பில்டர், குட்டி பால் குக்கர், நாலைந்து டப்பாக்கள், கீழ்த்தட்டில் துணிக்குப் போடும் சோப்பு, உடம்பு தேய்த்துக் கொள்ளும் லைப்பாய்சோப்பு, க்ஷவரசெட், ஒரு அலுமினியக் குவளை, மாடியிலேயே பாத்ரூம் செளகரியங்கள், உயரத் தொட்டி.


அலமாரியை ஒட்டி மேஜை நாற்காலி. கூஜாவிலிருந்து ஜலத்தைத் தம்ளரில் வடித்துக் குடித்துவிட்டு, கட்டிலில் படுக்கை மேல் சாய்ந்தாற்போல் உட்கார்ந்தார். பசி வயிற்றைக்கிள்ளிற்று. ஆனால் எல்லாக்கடைகளும் 'பந்த்.' ஒரு பன், பொறை, பச்சை வாழைப் பழத்துக்குக் கூட வழியில்லே. வெறும் வயிறு இரைந்தது. சுருக்கப் புண்ணாகி விடுகிறது; துரக்கத்தை வேறு கெடுத்தது.

“தர்மராஜனா? யமத் தீனிக்கு மறுபெயர்னா?” என்று யாரும் வியந்தது ஒரு காலம் உண்டு. “அந்தப் பாம்பு வயிற்றில் எப்படி 'பேக்' பண்றானோ?”

யார் அழைத்தாலும், எப்போ வேனுமானாலும், எத்தனை தரமானாலும் வயிறு தயார்.

பெற்றோர் இருவரையும் இழந்து விட்டாலே, அந்த அகதி உணர்வு ரத்தத்தில் தோய்ந்து போய் எல்லா ஆத்திரங்களுக்கும் காரணமாக, வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவமாக அமைந்து விடுமோ?

சர்வம் கபளீகரம்:

குண்டோதரப் பசி:

பஹாசுரம்:

வயிற்றுப் பசி மட்டுமல்ல, என்னென்னவோ பசிகள் ! எல்லாவற்றையும் விழுங்கிவிட்டு இலையுதிர்ந்து கழித்த தனி மரமாய் நிற்கிறேன்; என் தனிமையை அடை காக்கிறேன். இந்த உடம்பு விஷயத்தில் பெரியப்பா ஒரு அசகாய சூரன். நாக்கைக் கட்டி, வயிற்றைக் கட்டி...