பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லா.ச.ரா

23

ஆச்சரியம் தெளிய நேரம் வைக்கவில்லை - தடாலென்று காலில் விழுகிறார்கள். நாடார் முதுகு யானை முகம் போல் - நெற்றி மேடு மத்தகத்தோடு ஒட்டும் பிளவு - தோன்றுகிறது. உற்சவத்துக்கு முன்னால் போகும் இரு பூதங்கள். பதறி யெழுகிறார்.

“என்ன நாடார் இது?"

“ஐயா! திருநீறு இடுங்க."

அவருக்கு இடுகிறார்.

“அவளுக்கும் இடுங்க !”

கை பதறுகிறது. பழக்கமில்லை.

“இடுங்க, எங்கள் பழக்கம்.”

இடுகிறேன்.

குழை கனத்தில் ஆச்சிக்குக் காது அறுந்துவிடுமோ?

“நாடார், நான் தோசை கேட்டேன். வாஸ்தவம். பூசை கேட்கவில்லை.”

ஏதோ நினைப்பு வந்து நாடார் கன்னத்தில் போட்டுக் கொள்கிறார். சரி, சரி. நான் தப்புப் பண்ணினேன். உறவு கொண்டாடினேன். மாட்டிக் கொண்டேன்.

ஆச்சி துணியை எடுக்கிறாள். எவர்ஸில்வர் புத்தம் புதிது. பாம்பே மீல்ஸ் குழித்தட்டு. ஒரு குழியில் சட்னி மேல் நெய் பளபளக்கிறது. ஒரு எவர்ஸில்வர் பேலா, புத்தம் புதிதில். உருளைக்கிழங்கு, கத்தரி, செள செள எல்லாம் சேர்த்துத் தளர ஒரு கூட்டு. தட்டில் நடு இடத்தை நாலைந்து தோசை அளவாய் அடைத்துக் கொண்டு நடுவில் புள்ளி விழுந்து, மெத்து மெத்தென வெளுப்பாக...

"ஐயா! சாப்பிடுங்க, காப்பி தயாராவுது. ஏதாச்சும் வேணும்னா சிமணியிலே கை தட்டுங்க...”