பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லா.ச.ரா

25

செய்யணும் என்பது தெரியாமலே ஏறுவதில் ஒரு குஷி

ஆ! இவ்வுலகம் எவ்வளவு அழகாயிருக்கிறது!

ரூட் வளைந்து வளைந்து எங்கெங்கோ செல்கிறது. இன்றுதான் இந்த உலகத்தை ஸ்பெஷலாக அனுபவிக்கிறேனா?

பாங்க் ஆஃப் பரோடா, ஒரு பெரிய பலகை, ஒரு சந்து திருப்பத்தில் பஸ்ஸோடு தானும் சேர்ந்து பார்வையில் சொகுஸாக வளைகிறது. ஒரு கணக்கு இங்கு ஆரம்பித்தால் என்ன? இன்று மனம் போன போக்கெல்லாம் போவது என் விதியென்று கொண்டால் என்ன? அப்படியிருந்தால் தானே அப்படித் தோன்றும். “ஸ்டாபிங் ஹோல்ட் ஆன்!” கண்டக்டர் விசிலில் கற்கண்டு தெறிக்கின்றது.

இறங்கிப் பின்னோக்கி வங்கிக்கு நடக்கிறார்.

கெளன்டர்களே மாறிவிட்டன. முன்னெல்லாம் கெளன்டர் என்றால் உள்ளிருப்பவன் இரும்புக் கிராதிக்குப் பின் சிறைக் கைதி போல் காட்சி அளிப்பான். இப்போ கெளன்டர் தழைந்து வெளியிலிருப்பவனும், உள்ளிருப்பவனும் சகஜமாகப் பேசி வங்கியைப் புரிந்து கொள்கிறார்களாம்.

இது மரியாதை வாரம். இது உங்கள் வங்கி, என்ன வேணும். கேளுங்கள். செய்யக் காத்திருக்கிறோம்.

'ஹலோ மிஸ்-மன்னிச்சிக்கோங்க.நான்...'

ராக்ஷதப் புத்தகத்திலிருந்து அவள் தலை நிமிர்கிறாள்.

மண்டையுள் மணிகள் அடிக்கின்றன. வெள்ளி மணிகள் நினைவில் சிற்பக் கதவுகள் திறக்கின்றன. பெரிய ஜாலர் ஒன்றுடனொன்று அறைகின்றது.

அவள் கண்களிலும் குழப்பம், ஆச்சரியம் அடையாளம்-எழுந்து நின்று விட்டாள்.

“கோமதி!”