பக்கம்:கல் சிரிக்கிறது.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லா.ச.ரா

29

கல்யாணம். அதற்கு இரண்டு வருஷங் கழித்து ப்ரஸாந்த் பிறந்தான். ஆகவே பன்னிரண்டு வருஷங்கள்-”

ஆனால் கழுத்தில் சரடு மட்டும்தான் தொங்கிற்று. வேறு நகைகள் காணோம். இப்போது கனத்த நகைகள் ஃபாஷன் இல்லை. நாசூக்கா மெல்லியதாய் செயின் -

“உன் எசமானர் என்ன செய்கிறார்?"

“இன்ஷூரன்ஸில் இருக்கிறார் - ஸார், இன்னி ராத்திரி சாப்பிட வாங்கோளேன்!அவரையும் சந்திக்கலாம். அவகாசமாய்ப் பேசலாம்.”

யோசனை. “விலாசம் கொடேன்."

தன் பையில் ஏதோ கடிதாசைத் தேடி-ஏதோ ரொக்கச் சீட்டு பின்புறத்தில் எழுதித் தந்தாள்.

“ஸார், உங்களுக்கு என்ன பிடிக்கும்?”

“உனக்குத்தான் தெரியுமே! வத்தல் குழம்பு, சுட்ட அப்பளம்.”

இருவரும் சிரித்தனர்.

“சார், உங்கள் பல்லை நம்ப முடியவில்லையே! பொய்ப் பல் மாதிரி அவ்வளவு வரிசையா, முத்தா, வெள்ளையா-”

“என்னை அவமானப் படுத்தாதே -” பல்லை விரலால் இறுகப் பிடித்து ஆட்டிக் காட்டினார்.

“எனக்கு அவ்வளவு தைரியம் வரல்லியே ஸார்” முனகினாள். “கடைவாய்ப் பல்லை எடுக்கனும் என்கிறான்.”

“இதெல்லாம் பரம்பரை வழி. ஆனால் என் மாதிரி எந்தக் காரணத்திலும் ஒட்டாத இரண்டுங் கெட்டானை வெச்சிண்டு எந்த ரூலும் பேச முடியாது.”

“நீங்கள் சொல்றது சரிதான். என் தகப்பனார்