பக்கம்:களத்துமேடு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

3


பொற்கலசம் போன்ற அந்தம். விசாலமான வாசலிலே கீழ் வசமாக அமைப்பு, கீற்றுக் கொட்டகையில் குதிர் காபந்தாக அமைந்திருந்தது. 'எதிர்காலம் மிக உண்டு' என்ற தாத்பர்யத்துடன் நிமிர்ந்து தழைத்து நின்று பூக்களைச் சொரிந்த வண்ணம் இருந்த முருங்கைப் போத்தின் நிழல் அந்தக் குதிருக்குக் கிட்டிய துணை, வடமேற்குப் பக்கத்தில் நிலைத்துவிட்ட, மாட்டுக்கொட்டிலும் தென்கிழக்குப் புறத்தே ஒய்யாரமாக நின்ற வைக்கோல் போர்க்கும்பலும் விதை நெல் சேமிப்புக்கு வாய்த்திட்ட காட்டுக் காவலோ?

அந்தி வானத்தின் விந்தைக்கதிர்கள் சுந்தரப் பூரிப்புடன் நெடு வாசல் நெடுகிலும் விளையாடிக் கொண்டிருந்தன. பிரிவின் கிலேசம் லவலேசமாவது குறி சொல்ல வேண்டுமோ!-கிடையாது. 'ஒன்றின் முடிவு இன்னொன்றின் ஆரம்பத்துக்குப் பிள்ளையார்சுழி இடுவதே தர்மம், மரபு, நியதி!' என்னும் விதியின் தடம் ஒற்றிய தத்துவம் அந்திக் கதிர்களுக்குப் பாடம் ஆகியிருக்கும் போலும்!

அவள் இருட்டை விட்டு வெளியே வந்தாள். வாசலுக்கு வந்தும்கூட, இன்னமும் அவளது கண் எரிச்சல் அமரவில்லை . நாசூக்காக மூக்கை உறிஞ்சிக்கொண்டு, சுங்கடியின் முக தலைவைக் கொய்து, முகத்தைத் துடைத்தாள். இப்போது கண்கள் துலாம்பரமாக விளங்கின. வாசலிலே விளையாடிய மஞ்சள் வெயிலின் எழில் கூட அவளுக்குப் புதிய அர்த்தத்தையே கொடுத்தது "என்னமோ, இண்ணைக்கு அல்லாமே புதுசாட்டந்தான் மனசுக்குத் தோணுது. ம்....என்னோட மனசுக்கு ஏத்தாப்பிலவே, ஆத்தா மூத்தவளோட லவிதமும் ஒத்துமையா எழுதிக்கிடந்துச்சுதின்னா, அப்பாலே எம்பாடு வேட்டைதான்!.... அப்பாலே, அப்பன்காரக கிட்டவும் காதைக் கடிக்கத் தோதுப்படும். அடடே, நான் மறந்தே பூட்டேனே?.... இப்பத்தான் அப்பனுக்கு கண்டு முதல் சோலி அல்லாம் ஒஞ்சுக்கிடக்குது. காலைக்கையை உதறிப்போட ஒரு கிழமை வேணாமா?... அந்தக்கெடு பொறுத்துத்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/10&oldid=1386077" இலிருந்து மீள்விக்கப்பட்டது