பக்கம்:களத்துமேடு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து கேடு

98

“ஆமா, மாப்புள்ளையும் ஒன் அயித்தை மகனும் இன்னமும் வரலையே?... எட்டு, ஒம்பது நாழிப்பொழுது ஆகியிருக்குமே?” என்று சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தார் செங்காளியப்பன், அப்போது, வாசலில் காலடி அரவம் கேட்டது

ரெண்டு பேரும் அந்தாலே வந்திட்டாகளே — மச்சானையும் அயித்தை மவனையும் கண்டு அவகளெ வரச் சொல்லிபுட்டுத்தான் நான் வந்தேனுங்க என்றாள் தைலம்மை. அவசரம் அவரசரமாக, உள்ளே இரண்டாம் கட்டுக்கு நடந்தாள் அவள்.

“அரிக்கன் லாந்தருக்கு விலாம் பெண்ணை ஊத்திப் பொருதிப்பிடு, தைலி!” என்றார் அப்பன்காரரர்.

‘ஊம்’ கொட்டிக்கொண்டே, எரிந்து ‘அரிக்கன்’ விளக்குடன் வந்து நடையில் பிள்ளைச்சுவரில் வைத்தாள் தைலம்மை, வெளிச்சத்தின் தடத்தில், சரவணணும் சிங்காரமும் வந்து நின்றார்கள்!

நிலவும் வந்து நின்று எட்டிப்பார்த்தது.

நிலவொளியில் தெரிந்த அவ்விரண்டு முகங்களிலும் காணப்பட்ட சலனம் சேர்வைக்குத் திகிலை ஊட்டியிருக்க வேண்டும். அவர் உள்ளம் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணித் தொலைத்தது. வெளிக்காட்டிய வண்ணம் இருந்த சிரிப்பை மல்லுக்கட்டிப் பிடித்து வைத்துக்கொண்டார் அவர். “வாங்க மாப்புள்ளே! வாப்பா, சிங்காரம்!” என்று வரவேற்புச் சொன்னார்.

‘ஊம்’ என்று சரவணணும் சிங்காரமும் பேசிவைத்துக் கொண்ட மாதிரி ஒரே குரலெடுத்து ‘உம்’'கொட்டிய வண்ணம், அரிக்கண் விளக்கை மையமாக்கி, அதன் இருபுறங்களிலும் விருந்தாளிகள் இருவரும் நின்றார்கள். தைலம்மை ஒதுங்கிக் கொண்டாள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/100&oldid=1386207" இலிருந்து மீள்விக்கப்பட்டது