பக்கம்:களத்துமேடு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

101

பிள்ளை தாக்கலிலே தீராத மலைப்பையும் மாளாத மனச்சங்கடத்தையும் தருது!... மாப்பிள்ளைகாரகளே என்னோட ரகசியத்தைத் துப்புக்கண்டுதான் எங்கிட்டே கேட்கிறத்துக்கு நினைச்சிருந்தாங்கபோலே! அவுக எங்கிட்டே எதுவும் பேசதுக்கு முந்தியே, அந்தத் தகவல் உங்காதுக்கு எட்டி, இப்ப நீயே என்னை நேருத்திரமாக் கேட்டுப்புட்டே!..... விசயம் இம்மட்டோடே போயிடலை. விடிஞ்சதும் மாப்பிள்ளைகாரக வந்தும் என் வாயைக் கிண்டிக் கிளறத்தான் செய்வாங்க! ... அவுக பேச்சு சரளமா இருந்தாச் சரி. இல்லே, அவுங்க வார்த்தை சூட்சுமமாய் இருந்ததின்னா, அப்பாலே எனக்கும் ரோசம் புட்டுக்கிட்டுத்தான் வரும்!... இல்லீயா, ஆத்தா?....”

செங்காளியப்பனுக்கு மேற்கொண்டு பேசக்கூடவில்லை. அவர்தம் புத்திரியைக் கூர்ந்து கவனித்தார்.

அவளோ வாய்மூடி மௌனியாக வீற்றிருந்தாள். சோற்றுக்கை இன்னமும் சோற்றைப் பிசைந்து கொண்டுதான் இருந்தது. இடதுகை, கழுத்துச் சங்கிலியை நெருடிவிட்டுக் கொண்டிருந்தது. அடி இமைகளின் கீழ் வளையில் கண்ணுக்கு ஒரு துளியாகத் தேங்கியிருந்தது.

இரவின் நிலவும், நிலவின் மோனமும் தந்தையையும் மகளையும் தாயக் காய்களாக்கி வேடிக்கை காட்டினவா?-இல்லை, வேடிக்கை பார்த்தனவா?

“ஆத்தா, நீ மூச்சுவிடாம இருந்தாக்க, என்ன புரியும் இந்தக் கிழவனுக்கு?..” என்று கேட்டார் அவர்.

தன் தந்தை தம்மைக் கிழவனாக ஆக்கிக் கொண்ட விந்தை தைலம்மையை வியப்புக்குள்ளாக்கியது. ஆனாலும், அந்த விந்தையைப் பற்றி அவள் பொருட்படுத்தி எண்ண முயலவில்லை. ‘நீங்கதான் உங்க முடிவை சாடை காட்டிட்டீங்களே, அப்பா?... சிலட்டூர் மச்சான் வசம் தப்பிக் கேள்வி கேட்டாக்க, நீங்களும் வசக்கெட்டுப் பேசப் போற விசயத்தையும் புட்டுவச்சுச் சொல்லிபிட்டிங்களே?.... அப்பாலே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/108&oldid=1386244" இலிருந்து மீள்விக்கப்பட்டது