பக்கம்:களத்துமேடு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

களத்து மேடு


அப்பொழுது சரவணன் துள்ளல் நடைபோட்டுக் கொண்டு வந்து நின்ற ரேக்ளாவிலிருந்து இறங்கிக் குதித்தான். வண்டியை அவிழ்த்து விட்டு, தார்க்குச்சியை 'வரிச்சிக்கழி’யில் வாகு பார்த்துச் செருகினான். "கூட்டாளி சிங்காரம், ஒன்னை உண்டனப் பொழுதுக்கு நான் காக்க வச்சுப்புட்டேன். கோவிச்சுக்காதே!" என்று சொன்னான் சரவணன்.

"அதாலே குத்தமில்லேப்பா, சரவணா ரொம்பத் தொலைவு போயிட்டாப்பிலே தோணுது!" என்றான் சிங்காரம்.

"எங்கேயும் போயிடலை, தைலிப்பொண்ணை ஒரு கடுத்தம் கண்டுதண்டிக்கினு வரவேணும்னு ஒரு ரோசனை வந்திச்சு.அதான் பறிஞ்சிட்டேன்!" என்று அறிவித்தான் சரவணன்.

"அப்பிடியா? பலே!..."

ஆமாப்பா!... உங்க அம்மான்காரர் விசயமா இருந்த தடங்கலும் தெய்வாதீனமாய் தீர்ந்திடுச்சு! அவரு கள்ளச் சிநேகம் வச்சுக்கிட்டு இருந்த அந்தப் பொம்பளை காலமாயிடுச்சாம்!...இதொட்டித்தான், எங்க அப்பன் ஆயிக்கு கொஞ்சம் சடனை மனசுக்குள்ளாற இருந்திடுச்சு இப்ப அந்த வில்லங் கமும் பணியாட்டம் கலைஞ்சிருச்சு . சரி, இனிமே நாம ரெண்டு பேருந்தான் ஒரு முடிவுக்கு வந்தாகனும்!. ஊம், சொல்லு சிங்காரம் உன்னோட முடிவை" என்று சொல்லி, தன் தோழனான சிங்காரத்தை ஊடுருவி நோக்கினான் சரவணன்-அவன் விழிகள் ஏனோ துடித்தன!

சிங்காரமும் முன்முடியைக் கைகளால்கோதி விட்டவனாக, சரவணனைப் பதிலுக்கு ஊடுருவிப் பார்த்தான். பிறகு மெளனப்பிள்ளையார் போலப் புன்னகை செய்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/123&oldid=1386288" இலிருந்து மீள்விக்கப்பட்டது