பக்கம்:களத்துமேடு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

125


"அந்த முடிவு என் சொந்த விசயமடி, சொக்கி. அதைச் சொல்லுறதுக்கு இந்தக் குளத்தங்கரையா தோது?... அப்பாலே வாடி என்வூட்டுக்கு! போடி, போக்கத்த குட்டி!... எம்முடிவான முடிவைப் பத்தி நம்ம சங்கரன் குடியிருப்பு கூடிய சீக்கிரத்திலே புரிஞ்சுக்கத்தான் போகுதுடி. அப்ப நீயும் புரிஞ்சுக்குவே!...?” என்று பட்டுக் கத்தறித்த பாங்கினில் முடிவு சொன்னாள் தைலி.

“எங்க தைலி மரக்கொடி கட்டி ஆளப் போறவளாக்கும்! அவ போக்கு அவளைப்படைச்ச மகேசனுக்குக் கூட புரியா தாக்கும்!” என்றாள் பொன்னாயி. தலைமுழுகிக் கரைக்கு வந்து நின்றாள் அவள்.

“ஆமா, ஆமா! ”என்ற குரல்கள் ஒரு சேர எதிரொலித்தன. மெளன பிம்பமாகக் காணப்பட்டாள் குமரிப்பெண் தைலி.

“ரெண்டு மாப்பிள்ளையிலே யாரோ ஒருத்தருக்குத்தான் தைலி மாலை போடப்போறா!” என்று இடை வெட்டினாள் சொக்கி.

“ரெண்டு பேருக்கு மாலைபோட்டு முந்தானை போட்ட தட்டுவாணி நீ . அதான் அந்தத் தட்டுக் கெட்ட தில்லுமல்லுப்புத்தி ஒனக்கு வருது! ஒம் புதுப்பணம் எங்கிட்டேயாடி செல்லும்?... போடி, போக்கணம் கெட்டவளே?” என்று கோபக்கனல் தெறிக்கப் பேசிய தைலம்மை எழுந்து சொக்கியை மொத்தினாள்.


“போறாடி சொக்கி, விடுடி அவளை!” என்று தைலியைத் தடுத்தார்கள் பெண்டுகள்.

“அக்கா, அக்கா!” என்று ஒடோடி வந்தாள் பூங்கா வனம். மேனி குலுங்க வந்து நின்றாள். அக்காளின் கைகளைக் கெட்டியாகப் பற்றினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/132&oldid=1386078" இலிருந்து மீள்விக்கப்பட்டது