பக்கம்:களத்துமேடு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

7


தைலம்மை நடந்தாள்.

பனிவாடை வீசியது.

முன்பகுதி நிலவு ரசனை யுணர்வு மண்டிய பாவனையில் மண்ணைக் கண்காணித்துக்கொண்டிருந்தது.

நளினமான மெல்லிளங் காற்றும், மன மோகனச் சீதளமதிக் கதிர்களும் அச்சூழலுக்கென்று இயற்கை அமைத்துக் கொடுத்த சீதனம்போல விளங்கியது.

இருமருங்கிலும் தென்னங்கன்றுகளும் ஒட்டுச் செடிகளும் நிரம்பியிருந்தன.

மூசு மூசென்று ஆளுக்கு நாலு கடகால் தண்ணீர் இறைத்து நிரப்பிக் கொண்டனர்.

இரண்டு கை பச்சைத் தண்ணீரை அள்ளி எடுத்து முகத்தில் வீசினாள் தைலம்மை, ஒரு வாய்த் தண்ணீர் அவளது தாகத்துக்குப்போதக் காணோம். மறுகை உதவியது.

புறப்பட்டு விட்டாள் தைலம்மை, அள்ளிச் செருகிய கொண்டை; அதிலே மருக்கொழுந்துக் கொத்து. எங்கும் நீக்கமற நிறைந்துவிட்ட இறையை நிகர்த்து மணம் கூடியது; மணத்தினைக் கூட்டியது.

காந்தக் கவர்ச்சி மின்னி விளையாடிய நயனங்கள். போதையின் போதம் தெளித்துக்கிடந்த இதழ் துண்டங்கள். விழிகளும் உதடுகளும் பாவத்துடன் உண்டு பண்ணிய குறுஞ்சிரிப்பு. விதியின் சூட்சமச் சிரிப்பின் விடுகதைப்பாணியில் அடிக்கடி ஒளிந்து ஒளிந்து தோன்றியது.

மதுக்குடம் ஏந்திய பருவத் திளைப்புடன் 'தலைச் சும்மாட்டில்' சுமந்த நீர்த்தோண்டியுடன் ஒயிலே அவளாக-அவளே ஒயிலாக-நடந்தாள்.

விழிபற்றி, வழி பற்றினாள் பொன்னாயி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/14&oldid=1386104" இலிருந்து மீள்விக்கப்பட்டது