பக்கம்:களத்துமேடு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதிர்க் கொத்து 15

தாலிப் பிரச்சினை

ப்பம் பறித்த வண்ணம், செங்காளியப்பன் சேர்வை நடைக்குவந்து, அங்குக்கிடந்த கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்தார். அவரிடம் வெற்றிலைப் பெட்டியைக் கொண்டு வந்து வைத்தாள் சேர்வை மகள் தைலம்மை. “சாப்பிட்டியா ஆத்தா?” என்றார் தந்தை. மகள் 'ஊம்' கொட்டினாள்.

“ஆத்தா, பங்குனி நாலிலே ஒரு முகூர்த்த நாள் இருக் காம். நகரத்து ஐயர்சாமி சொன்னாரு. அப்பவே ஒங் கண்ணாலத்தை முடிச்சப்புட வேண்டியதுதான். இன்னம் பதினைஞ்சு நாள் இருக்கு. ஒனக்கு அட்டிகை செய்யிறத்துக்கு தையிலேயே தங்கம் கொடுத்தாச்சு. அட்டிகையாவே ஒங்கண்ணிலே காண்பிச்சு உன்னைப் பிரமிக்க வைக்கணு மின்னுதான் இந்த விசயத்தைக் கமுக்கமா வச்சிருந்தேன். மத்தப்படி, ஒன் ஆத்தாளோட எல்லா நகை நட்டுந்தான் பெட்டகத்திலே பத்திரமாயிருக்கு. நெல்லுக் கவலைதான் எப்பவும் நமக்கு இல்லே!... மற்ற அலுவலுக்கு பண்ணைக்காரனுகதான் கைகட்டிச் சேவகம் பண்ண காத்துக்கிட்டு இருக்கானுகளே?...” என்று தம் பேச்சைத் தொடங்கினார் சேர்வை. “இன்னொரு சங்கதியும் காதுக்கு எட்டுச்சு. உங்க சித்தப்பன் வூட்டிலெயும் அன்னையத் தேதியிலே கொட்டு மேளம் கொட்டுமாம்!” என்றும் தெரிவித்தார் அவர்.

“அப்படிங்களா? பிறத்தியார் சங்கதி இருக்கட்டும் முதலிலே நம்ம வூட்டுத் தாக்கலுக்கு வருவோம்!...ஆமா, கண்ணாலத்துக்குத் தேதி எல்லாம் வச்சுப்புட்டீங்களே! மாப்பிள்ளை யாருன்னு சொல்லலிங்களே, அப்பாரே,” என்று கேள்வி விடுத்தாள் தைலம்மை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/144&oldid=1386199" இலிருந்து மீள்விக்கப்பட்டது