பக்கம்:களத்துமேடு.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

157


பூவாயி இப்போது தைலம்மையின் மனத்தில் சுழன்றாள்.' பூவாயி கதை நெசமாவே கதையாட்டம் தான் நடந்திருச்சு!... பூவாயியை அது இஷ்டப்படி அதோட முறைக்காரன் கடத்திக்கிட்டுப் போட்டான். ஆன, பேசிவச்சிருந்த மாப்புள்ளைக்காரன் ஏமாந்திடலை. முறைக்காரனை அடியே தண்டமா அடிச்சுப்போட முனைஞ்சு, அதாலே ரெண்டுபேருக்கும் அடிதடி வந்து, கடோசீலே ரெண்டுபேரும் கோரட்டுப்படியை மிதிச்சிருக்காங்க! அப்பப்பா! ஒரு பொம்பளையின்னா, எம்புட்டு சோதனை வருது பூலோகத்திலே!...' எண்ணப் பூக்கள் மலர்ந்தன.

'என்னை உத்தேசிச்சு இது மாதிரி மாப்புள்ளைக்காரங்க ரெண்டு பேரும் சண்டை அடிச்சுக்கிடாம இருக்க வேணும். இப்பைக்கு உள்ள நிலவரத்துப்படி பார்த்தாக்க, அம்புட்டு லேசிலே இவங்களுக்குள்ளாற சண்டை வராது! ஏன்னா, அவுங்களுக்குள்ளாற உள்ள நேசம் தனிப்பட்ட தாக்கும்!' இவ்வாறு அவள் சிந்தித்து ஆறுதல் படுத்திக் கொண்டாள்.

பொன்னாயி நெல்லைக் கொட்டி கிளறிக் கொண்டிருந்தாள்.

அப்போது, ஏதோ சத்தம் கேட்டது.

"என்னாடி பொன்னாயி, அது சத்தம்?"

"செட்டியவூட்டு ஆச்சிமாருங்க குப்பைச் சண்டை போட்டுக்கிடுறாங்க!"

தைலி காதுகளைத் தீட்டிக் கொண்டு கேட்டாள்.

ராகம் நீண்டது:

'கொடிகட்டி அரசாண்டு நான்
குந்தவச்சு சோறு உண்ணேன்!
குடி கெடுத்த கூனி நீயும்
குடல் வத்திக் காயுறீயேடீ!

கும்பகருணன் பொண்டாட்டியே!"...
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/164&oldid=1386139" இலிருந்து மீள்விக்கப்பட்டது