பக்கம்:களத்துமேடு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

165

களத்து மேடு

அப்பாருக்காக நான் ஒன்னைக் கெஞ்சி வேண்டிக்கிறேன். எங்களை மன்னிச்சுப்புடு. ஒன் ஆயுசுபரியந்தம் இந்த வூட்டிலே நானு ஒனக்குச் சோறு போடுறேன். நீ இங்கேயே தங்கிக்கிடு. வேறே யாதொண்ணையும் ஊர்க்காட்டிலே புகையவுட்டுப் புடாதே!” என்று மன்றாடினாள் தைலி

“ஓம் போக்கு எனக்கு ரவைகூட புடிக்கலை, தைலி” என்று ஆத்திரத்துடன் இரைந்தார் செங்காளியப்பஞ் சேர்வை.

“ஒங்க போக்குத் தான் எனக்கு இத்திகூட புடிக்கலை, அப்பாரே!” என்று எதிர்த்துக் குற்றம் சாட்டினாள் சேர்வை மகள்.

சேர்வை பதிலுக்கு ஒன்றும் சொல்லாமல் உள்ளே விரைந்தார். கால் நாழிப் பொழுது கழித்து சுருட்டும் புகைச்சலுமாகத் திரும்பினார், “ஏலே பாஞ்சாலி!... இந்தா நூறுரூவா, இதை வச்சுக்சிட்டுச் சாப்பிடு, பங்குனி முடியிற் மட்டும் இங்கிட்டுத் தலையைக் காட்டாதே! அதுக்குள்ளாற எம்மவள் கண்ணாலம் முடிஞ்சிடும். அப்பாலே, நீ எப்ப வேணுமானாலும் வா! நீ ஒருத்திதான் என்னைச் சோதிக்கிறதிலே பாக்கி இருக்கே!.... வாரவிதி வந்து தான் தீரும்! அப்பாலே, எங்க பொண்ணு மனசுப்படி நீ இங்கிட்டே இருந்து சாப்பிடலாம். ஊம், கிளம்பு. ஊரிலே எதையும் சொல்லிப் புடாதே!.... அப்புறம், நான் மிருகமாய் ஆகிப் பிடுவேன்!”, என்று எச்சரித்துவிட்டு, சேர்வை துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு வெளியில் கிளம்பினார்.

கும்பிட்ட பாஞ்சாலியின் ஈர்க்குச்சிக் கைகள் நடுநடுங்கின. நானு போயிட்டுவாரேன். “நீ இவுக மகள் என்கிற துப்பு எனக்குத் தெரிஞ்சிருந்தும், அண்ணைக்குக்கூட ஓங்கிட்டே நான் எதைப்பத்தியும் சொன்னேனா? தாயே, உங் கண்ணாலம் சிரத்தையா நடக்கட்டும். நீ ரொம்பச் சீரோடே இருப்பே, தைலி” என்று சொல்லி விடைபெற்று நடந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/173&oldid=1386152" இலிருந்து மீள்விக்கப்பட்டது