பக்கம்:களத்துமேடு.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

179


நோக்கியவர்கள் சரவணனும் சிங்காரமும்! அவர்கள் கண்கள் கண்ணீரை வடித்துக் கொண்டிருந்தன.

அதற்குள் "ஆத்தா!" என்று அலறிக் கதறியவண்ணம் ஓடோடி வந்து விழுந்தார் செங்காளியப்பன் சேர்வை. மகளைப் பார்த்தார். மகளின் காலடியிலிருந்து பாம்பு நழுவியோடிய தகவலும் சொல்லப்பட்டது. "பாம்பு கீம்பு தீண்டியிருக்குமோ? சொரணை தப்பிக் கெடக்குதே என் பொண்ணு!" என்று ஓலமிட்டார்.

"ஐயையோ!" என்று ஒருசேரக் கதறினார்கள் சரவணனும் சிங்காரமும்.

அதற்குள் பாம்பாட்டி முனியன் அங்கு வந்து விட்டான். தைலியைப் பார்த்தான். நாடியின் கணிப்பை அறிந்தான். "அதெல்லாம் இல்லீங்க. நஞ்சு ஒண்ணும் இது மேனியிலே தண்டலைங்க! அதுக்குண்டான தடயம் துளிகூட தட்டுப் படலீங்க சாமியோ!" என்றான்.

"ஆத்தா, எல்லாம் உன்னோட பிச்சைதான்!" என்று நல்ல மூச்சு விட்டபடி செருமலானார் சேர்வை.

அப்போது, தெய்வாதீனமாகக் கண்களை மெல்லத் திறந்தாள் தைலம்மை. சுற்றிச் சூழ, நோக்கினாள். தன் தந்தையைப் பார்த்தாள். அதே சுவட்டில், சிங்காரத்தையும் சரவணனையும் கூர்ந்து ஊடுருவி நோக்கினாள் அவள்.

சரவணனும் சிங்காரமும் தங்களையும் மறந்து தேம்பிக் கொண்டிருந்தார்கள்.

இப்போது தைலம்மை மெல்லத் தலையைத் தூக்கினாள். மூச்சை அடக்கிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். பொன்னாயியின் கைத்தாங்கலில் சாய்ந்து கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/186&oldid=1386272" இலிருந்து மீள்விக்கப்பட்டது