பக்கம்:களத்துமேடு.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

களத்து மேடு

இடது கையால் தலையைப் பிடித்தவண்ணம் அவர்கள் இருவரையும் மாறி மாறி-மாற்றி மாற்றிப் பார்த்தாள். அவளருகில் வந்து குந்தினார் சேர்வை.

இன்னமும் சிங்காரமும் சரவணனும் விம்மி வெடித்துக் கொண்டு தான் இருந்தார்கள்.

"இந்தப்பாருங்க, நீங்க ரெண்டுபேரும் இனிமே அழப்புடாதுங்க. எனக் கோசரம் இனியும் நீங்க கண்ணீர் விடாப்புடாதுங்க!.... நீங்க ரெண்டுபேரும் பெரிய மனசுபண்ணி என்னைச் சமிச்சுப் புடவேணும்!..... உங்க ரெண்டு பேரிலே யாருமே என்னை இனிமே அடைய முடியாதுங்க! ஒங்க ரெண்டு பேரையும் - ஒங்க ரெண்டுபேரோட பாசத்தையும் அன்பையும் - என்னாலே இந்தச் சென்மத்துக்கு மறக்கவே ஏலாதுங்க!... நீங்க ரெண்டு பேரும் இந்தக் களத்து மேட்டிலே ஒருத்தருக்கொருத்தர் வச்ச சம்பிராயம் தோத்துப் போயிட்டதாக நீங்க ரெண்டு பேருமே நெனைச்சு வருத்தப் படக் கூடாதுங்க! இந்த விளையாட்டிலே மெய்யாலுமே தோத்தவள் நானேதான்!... என்னை நீங்க ரெண்டு பேரும் சமிச்சுப்புடுங்க!" என்று விம்மி, அவர்கள் இருவரையும் சரவணன், சிங்காரம் ஆகிய இருவரையும்-நோக்கிக் கைகளைக் குவித்தாள் தைலம்மை. அவளது அழகான மார்பகம் அழகாக எம்பித் தாழ்ந்தது. அவளது பேசும் விழிச் செம்புகளினின்றும் பேசாத கண்ணீர் புனிதச்செறிவுடன் ஆறாகப் பெருகி வழிந்து சொட்டிக் கொண்டிருந்தது.

சரவணனும் சிங்காரமும் அப்படியே ஐயனார் சிலைகளாக மாறி நின்றார்கள், குனிந்த தலைகள் நிமிரவேயில்லை.

செங்காளியப்பன் சேர்வை வாயடைத்துப் போனார். அவர் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அவிழ்ந்த குடும் அவிழ்ந்தபடியே கிடந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/187&oldid=1386277" இலிருந்து மீள்விக்கப்பட்டது