பக்கம்:களத்துமேடு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

17

“ரொம்ப நன்றி...வரட்டுமா?...”

“நல்லதுங்க! ...”

அவன் பிரிய மனமின்றிப் புறப்பட்டான்.

அவள் மீண்டும் இடைமறித்தாள்.

“ஆமா, ஒங்க பேரு?”

“ஏம் பேர்...சரவணன்!. சிலட்டூர் கங்காணிக்குத் தலைமகன்!...”

முத்துப் பற்கள் முல்லை இதழ் வெட்டி மூரல் சிந்தின.

“ஏம் பேரு தைலம்மை!...பக்கத்து ஊர் ...சங்கரன் குடியிருப்பிலே செங்காளியப்பன் சேர்வைன்னா அல்லாருக்கும் அத்துபடி!...”

“ஒஹோ!....அவுக பொண்ணா.சபாசு, சபாசு!

அவன் ரேக்ளாவுடன் கடுகி மறைந்து விட்டான். மறுகணமே, மறைந்த அவனை அவளது நெஞ்ச மெனும் நித்திலப் பூப்பந்தலிலே கொலு வீற்றிருக்கச் செய்து விட்டாள்! கனவும் தனிமையும் சரவணன் ஆகிப்பொலிந்த பின், அவளுக்கு என்ன குறை?...மெய்தான்; மோனத்தில் ஞானம் பிறக்கிறது. அதே மாதிரி, காதலும்தான் பிறக்கின்றது!

விக்கல் எடுத்தது. அப்புறம்தான் அவளுக்கு இப்புவனத்தின் ஞாபகம் ஊடுருவியது. லோட்டாவை எட்டி எடுத்தாள். குடித்தாள். ‘ஆமா... அப்பன் சொன்ன மாப்புள்ளை இதே ஆளுதான்!...... அல்லாம் ஆத்தாளோட கடாட்சம்தான்... நாம நெனைக்கிறதை கடவுள் நெனைக்காதின்னு பேசுற பேச்சு பொய்! இந்தச் சம்பந்தம் மட்டும் ஒரு குந்தகமும் இல்லாமல், சுபமா முடிஞ்சிட்டா, மேலைக்கு ஆத்தா சந்நதியிலே போயி பொங்கல் வச்சு பள்ளயம் படைக்கோணும்!” எங்கொ கவுளி பேசியது. சீரான இடம், செம்மையாகக்காரியம் கைகூடும் என்று மட்டுப்படுத்திக் கொண்டாள்; மூசு மூசென்று வட்டிலைக் காலிசெய்தாள்.

க. மே, 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/24&oldid=1385878" இலிருந்து மீள்விக்கப்பட்டது