பக்கம்:களத்துமேடு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதிர்க் கொத்து 4
கை நனைக்கவில்லை!......

‘அஞ்சும் மூணும் உண்டானா, அறியப் பொண்ணும் கறி சமைப்பாள்!’ என்று மேலக்குடியிருப்புக் கிழவி வள்ளியாத்தா நொடிக்கு நூறு முறை, முறையிடுவாள். இது அவள் உதிரத்தோடு ஒட்டிவிட்ட வழக்கம்; பழக்கம். இதைச் செவிகொடுத்துக் கேட்பாள் தைலம்மை. இது அவளுடைய கடன். ஒன்று விட்ட ஆயாள் பறைவதை, ஒன்றுவிடாமல் கேட்க வேண்டாமா, பேத்தியான இந்தப் பேத்தி!...

ஐந்தும் மூன்றும் உண்டானால், அறியாப் பெண்ணும் கறி சமைக்கையில், ஐந்தும் மூன்றும் உண்டாயிருந்த தைலம்மைக்கு பொட்டுப் பொழுதிற்குள்ளாக, புழைக்கடைப் பக்கம் இருந்த தென்னந்தட்டி மறைவில் தலைக்கு நாலு செம்பு ஊற்றிக்கொள்ளத்தானா லாகவம் தெரியாது?..... அவசரமும் பதட்டமும் அவளது நரம்புகளில் ஊறியிருந்தது. இன்னும் இரண்டு செம்பு ஊற்றிக் கொண்டாள். வெக்கைக்கு இதமாக இருந்தது. சுருக்கென்று வாசனைச் சவுக்காரக் கட்டியை எடுத்தாள். நுரை தள்ளியது. உள்பாவாடையை ஞாபகத்துடன் மீண்டும் இறுக்கி விட்டாள். நெஞ்சிடை ஊறிய இன்பக் கிளுகிளுப்புடன், அண்டாவிலிருந்த தண்ணீரை அள்ளி அள்ளிக் கொட்டினாள். சற்று எட்டி வந்து, வாசற் புறத்துக்குத் திருஷ்டியைச் செலுத்தி மீட்டுக் கொண்டாள். இப்போது நிதானமும் அமைதியும் அண்டின. ‘இனி ஒண்னுமில்லே!...சமைஞ்ச பொண்ணு மேலு குளிக்கிறப்ப, விருந்தாடிக்கார படி மிதிச்சுப்புட்டாக்க, அப்பாலே எனக்கு வெக்கம் மூண்டுப்புடாதா?... ஐலேசா! தப்பிச்சாச்சு!...’ கன்னியா குறிச்சி மஞ்சளின் ரங்கு அவளது வந்த கன்னங்களுக்குக்‘களை’ சேர்த்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/44&oldid=1386364" இலிருந்து மீள்விக்கப்பட்டது