பக்கம்:களத்துமேடு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

களத்து மேடு


புத்தகம் அப்புறமும் அவளை அழைத்தது, அவள் வாய்விட்டு, மனம்விட்டுப் படித்தாள்.

“முத்திரை மோதிரத்தை
    முருகுழலாள் தானெடுத்து
கட்டழகன் மோதிரத்தைக்
    கண்களிலே தானும்ஒத்தி
பவுத்திர மோதிரத்தை
    பைங்கிளியான் தானெடுத்து
கண்மணி காயகரைக்
    காணேன் ஒருகாலும்,
மாது மணவாளன்
    வந்ததைப் பாரேனோ.
பாராமல் போனேனே,

    பாவிநான் ஆனேனே!.....”

தொடர்ந்து படிக்கவொட்டாமல் கண்கள் நனைந்தன. மூடிவைத்து எழுந்தாள். ‘ஆத்தா... என்னைப்பெத்த ஆத்தா!’ என்று தனக்குத்தானே வேதனையில் செருமி, நன்றியின் கனிவுடன் மனம் தளும்பி விதியின் விளையாட்டில் உயிர்ப்பதைப்பு எய்தினாள்.

அப்போது.

வாசற்பகுதியைத் தொட்டு ஒலித்தக் குரல் ஒன்று, “அம்மான்! அம்மான் காரவுகளே!...” என்று ஓலம் பரப்பவே, செய்தி அறிய, சாரைப்பாம் பாகக் கடுகி வெளிப்புறம் பாய்ந்தாள் தைலம்மை, கால்கள் பின்னின. பின்னமின்றித் தப்பித்தாள்.

வாலில் நின்ற வாட்ட சாட்டமான இளவட்டம், “தைலி, சொகமா?” என்று பாசத்தின் தூய்மையான நெருக்கத் துடிப்புடன் கேட்டான்.

சமைந்த பெண்ணோ, கல்லாய்ச் சமைந்தாள். “யாரு நீங்க?” என்று ஐயம் இழைத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/55&oldid=1386040" இலிருந்து மீள்விக்கப்பட்டது