பக்கம்:களத்துமேடு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

களத்து மேடு


“அப்ப நான் பேrறேன். அம்மான் வந்தாக்க, அவுகளோட ஒடப் பொறந்தா மகன் பர்மா நாட்டிலிருந்து வந்து தேடினதாகச் சொல்லுவீங்களா...?” என்றான் சிங்காரம். அவன் குரல் பரிதாபமாக ஒலித்தது.

அந்தக்குரலின் அந்தப் பாவனை அவளது இயல்பான இரக்கவுணர்வைத் தூண்டி விட்டிருக்க வேண்டும்.

அவன் புறப்பட ஆயத்தப்பட்டபடி, அவளை ஜாடையாக நோக்கினான். அவன் கண்கள் கலங்கியிருந்ததை அவள் கண்டுகொண்டாள். இப்போது நெகிழ்ந்திருந்த அவள் பெண் நெஞ்சம் மேலும் சலனம் அடைந்தது.

“வந்த காலோட நிக்கறீங்க... நானு சின்னப்பொண்ணு. வக்கணையாப் பேசி குந்த வைக்கிறதுக்கு ஓடலே!... திண்ணையிலே வந்து உட்காருங்க. தாகத்துக்குச் சாப்பிட்டுப் புட்டுப் போங்க!...” என்று கேட்டுக் கொண்டாள்.

அவன் ஆற்றாமையின் விரக்தியோடு சிரித்தான். ஒன்றும் மறுமொழி பேசாமல், திண்ணையின் முந்தலில் வந்து அமர்ந்தான். கால்கள் லய சுத்தத்துடன் ஆடின.

தைலம்மை உள்ளே மறைந்தாள்.

நீராகாரக் குவளை வெளியே வந்தது.

அவனிடம் அவள் தயங்கித் தயங்கி அக்குவளையை நீட்டினாள்.

அவனும் அதை மறுப்பதா, ஏற்பதா என்ற போராட்டத்துடிப்புடன் ஏந்தினான்.

அது தருணம், எதிரிலிருந்த ஒழுங்கையில் ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் மணல் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்த காட்சியை அவனும் பார்த்தான். அதைப்போலவே, அந் நிலையை அவளும் பார்த்தாள்.

சிறுவனுக்கும் சிறுமிக்கும் சச்சரவு மூண்டது. சிறுவன் அச்சிறுமியைச் சீமை ஒட்டுச் சல்லியால் மொத்தினான், சிறுமி ‘குய்யோ முறையோ’ வென்று அழுதாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/57&oldid=1386047" இலிருந்து மீள்விக்கப்பட்டது