பக்கம்:களத்துமேடு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

57

சின்ன அம்மான்காரக மவதான்!....என்னமா மறந்திருச்சுது? ... என்னைத் தைலம்மை அடையாளம் புரிஞ்சுக்கிடலை!.. அதையொத்து, இப்ப, நான் இந்தப்புள்ளையை யாருன்னு, தடயம் கண்டுக்கிட வாய்க்கலையே! என்று உள்ளுற வருந்தினான்.

“நானு உங்க சின்ன அம்மான் பொண்ணுங்க, மச்சான்!” என்று நேசம் பாராட்டி வெளியிட்டாள் பூங்கா வனம். சொல்லிவிட்டு அவனை விழுங்கி விடுபவளாக அப்படிப் பார்த்தாள். அப்பார்வையில் கன்னி மனம் நிழலாடியதா?– இல்லை, காலத்தின் விதி தான் மெளனக் குரலெடுத்து நகை செய்ததா?

அவன் சுதாரித்துக்கொண்டு, ஒன்னை நான் அப்படி ஒண்ணும் மறந்துப்புட மாட்டேனாக்கும்!...என்று சமாளித்தான்.

“எம்பேரு என்னான்னு சொல்லுங்க, பார்க்கலாம்!” என்று ஒரு அதிர்வேட்டைப் போட்டுவிட்டு கை கொட்டிச் சிரித்தாள் கன்னிப்பெண் பூங்காவனம்.

அவன் திகைத்தான்.

“பூங்காவனமின்னு மச்சானுக்குத் தெரியாதாக்கும்!” என்று ‘உரை’ ஏற்றி, உள்ளே நுழைந்துவிட்டாள் தைலம்மை.

“ம்... ஆமா” என்று இணைந்து பாடினான் சிங்காரம். பெரியதொரு சங்கடத்தினின்றும் தன்னைக் காத்து விட்ட தைலம்மையை அவன் நெஞ்சாரப் போற்றினான்.

“சரி. நான் போயிட்டு பொறகு வாரேன்,” என்று ‘பயணம்’ சொல்லிக்கொண்டு சிங்காரம் புறப்பட்டான். அவனைத் தொடர்ந்தாள் பூங்காவனம். அவளுக்கென்று இப்படி ஒரு துள்ளலா?... ஒயிலை உருவமாக்கி, பின்னிப் பின்னி நடந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/64&oldid=1386085" இலிருந்து மீள்விக்கப்பட்டது