பக்கம்:களத்துமேடு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

67

யாட்டுக் காட்டின. நெஞ்சில் பெருமூச்சு! நினைவில் நெட்டுயிர்ப்பு; வதனத் தளத்தில் கவலைகளின் வரிக்கோடுகள்.

“ராவு நம்ம அயித்தை மவன் எங்க வூட்டிலேதான் இலைச் சோறு உண்ணாங்க. கூனிப்பொடி பொறிச்சு வச்சோம்; சுண்டல் குழம்பு ஆக்கினோம். நல்லா ஒரு வெட்டு வெட்டிப்புடுச்சுதாக்கும்!” என்றாள் பூங்காவனம், வெள்ளைச் சிரிப்புடன்.

‘நல்லா ஒரு வெட்டு வெட்டிப் புடுச்சு’ என்று அவள் சொன்னதன் பொருளை, தாத்பரியத்தைத் தைலம்மை அறிவாள் என்றாலும் “யாரை யாரு வெட்டிப்போட்டாங்க!” என்றுகேட்டாள். பூங்காவனம் சிரிக்கவேண்டுமென்று எதிர் பார்த்தாள். ஆனால் அப்போதைய மனநிலையில் அவள் போட்டுதறிய சிரிப்புப் பேச்சு அவளுக்கே சிரிப்பை உண்டாக்கவில்லை. அவள் மனம் பூங்காவனத்தின் பேச்சினைத் தான் ஆராய்ந்து கொண்டிருந்தது.

“சிலட்டூரு மருமகப்பொண்ணாக ஆகப்போகுதாமே எங்க சித்தப்பன் மவ! அப்படின்னா, அதுக்கும் என்னொத்து சிலட்டூரிலேதான் சம்பந்தம் சாடிக்கை கூடியிருக்குதா? ஒக்கப் பிறந்தவருக்கு ஒரு மாத்து மிஞ்சியே செய்யோணுமிங்கிற கொள்கையுள்ள சித்தப்பன் காரரு வேணுமின்னே கூட அப்பிடி சிலட்டூரிலேயே மாப்புள்ளை புடிச்சுப் போட்டிருப்பாகளோ? இருக்கும்...! அக்கரைச் சீமையிலே பர்மா நாட்டிலும், லங்கை தேசத்திலும் நாலு கணக்குக் கொண்டு வித்து வந்த என்னோட அப்பன்காரக கிட்ட எங்க சித்தப்பன்தான் வம்புக்குவந்து மிச்சம் கட்டிக்கிட்டுப் போயிடப் போகுறாங்களா?... அந்தலவிதம் இந்தப் பொறப்பிலே கிட்டாது!...ம் !...ஆனாக்க ஒரு சமயம், எங்கப்பன் பேரிலே உள்ள சங்கடத்திலே எம்புட்டு சிலட்டூர் மச்சானையே வலை போட்டுப் புடிச்சு மடக்கிப்பிட்டிருப்பாரோ எங்க சித்தப்பன்?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/74&oldid=1386185" இலிருந்து மீள்விக்கப்பட்டது