பக்கம்:களத்துமேடு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களத்து மேடு

69

கூட்டத்தைக் கண்டதும் பூவரச மரத்து நிழலில் பொட்டுப்பொழுது கூடத் தாமதம் பண்ணாமல், தலைக்குடத்தை இடுப்புக்கு இறக்கிக்கொண்டு, முகத்தைத் துடைத்து விட்டாள். மாராப்புச் சேலையையும் செப்பனிட்டாள். லாகவமாக நடைபயின்றவளாக மனையைநாடி அந்த மனைப்பூ அடியெடுத்து, அடி பிரித்து வந்தது.

“தங்கச்சியோ தைலி!” என்று கூவி அழுதபடி அவளை அண்டி வந்தார் அடுத்த தெருக் கிழவர் அழகிரி அம்பலம்.

தைலம்மைக்குச் சப்த நாடிகளும் ஒடுங்கின. குடத்தைத் துருசுபண்ணித் தரையில் வைத்தாள். “தாத்தா, என்னா சங்கதி? எல்லாரும் எதுக்கு இப்பிடித் தெகைச்சு திகை தாங்கிப்போயி, மூச்சுக்காட்டாம நிக்கிறீங்க? ஒங்களோட அல்லார் வாய் முச்சூடும் அடைபட்டுப் போயிருச்சுதாங்காட்டி? அண்ணே, சாமியப்ப அண்ணே! என்ன தவசல்? மூத்தவுகளே, எதுக்கு ஊர்ப்பட்ட கண்ணீர் கொட்டுது ஒங்களுக்கு?” என்று ஒவ்வொருவராக நெருங்கி, நெருக்கமான பாசத்துடன் கேள்விகள் விடுத்தாள்.

ஆனால் யாராவது வாய் திறந்தால்தானே?

என்ன நடந்துவிட்டது?

ஒரு வேளை, தன் தந்தைக்கு உடம்புக்குத் திடுதிப்பென்று ஏதாவது நோய்நொடி வந்திருக்குமோ என்று ஜயங்கொண்டு உள்ளே விரைந்தாள் தைலம்மை.

உள்ளே பயம் செறிந்த அமைதிதான் கோலோச்சிக் கொண்டிருந்தது.

அங்கே யாரையும் காணவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/76&oldid=1386302" இலிருந்து மீள்விக்கப்பட்டது