பக்கம்:களத்துமேடு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

களத்து மேடு

அவள் கண்ணீரும் கம்பலையுமாக நின்றாள். “இம் புட்டுப்பேரும் எதுக்கு இங்கிட்டாலே இப்படிக் கூடி வந்திருக்கிறீங்க? சேதியைச் சொல்லுங்க இல்லாங்காட்டி வந்த போக்கிலே நடையைக் கட்டுங்க!” என்று ஆத்திரம் பொறியக் கூவினாள்.

அவ்வளவுதான்.

கூட்டத்தில் சலசலப்பு உண்டானது.

கிழவர் தொண்டையைக் கனைத்துக்கொண்டார். தைலம்மையை நாடி அந்த ஊன்றுகோல் தளர் நடையிட்டு வந்தது. “தங்கச்சி! உம் மனசை தேத்திக்கிட வேண்டியக் காலகட்டம் வந்து குதிச்சிருக்குது! உன் அப்பன் நம்ம ஊரு. களத்து மேட்டுப் பொட்டலிலே செத்துக்கிடக்கிறானாம், தைலி!” என்று செருமியவாறு தாழ் குரலில் செப்பினார் பெரியவர்.

தைலம்மை “ஐயையோ!” என்று விண்முட்டக் கூவினாள். மண்முட்டப் புரண்டாள். எழுந்து, ‘ஆத்தாளின்’ திருச்சந்நிதானத்தில் நெடுஞ்சாண்கிடையாகப் போய் விழுந்து, “ஆத்தா, மூத்தவளே! நீ உம்புட்டு உருவத்தை போலவே உம் மனசையும் கல்லாக்கிக்கிட்டீயா, தாயே?... இனி நான் என்ன பண்ணுவேன்? கன்னிப் பொண்ணு எனக்கு இனிமே யாரு ஆதாரம்?...ஐயையோ அப்பா!.... இனி எப்பொறப்பிலே ஒங்களைக் காணப்போகிறேனுங்க? ஐயையோ!” என்று அலறி, மண்டையில் அடித்துக் கொண்டாள். மண்டையை மண்மேட்டில் மோதிக்கொண்டாள்!

செங்குருதித் துளிகள் பீறிடத் தொடங்கின.

கன்னிக் காட்டேறியான ஆத்தாளுக்கு ரத்தக் காணிக்கை செய்தாளோ கன்னிகழியாத் தைலம்மை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/77&oldid=1386303" இலிருந்து மீள்விக்கப்பட்டது